44 நாட்களுக்கு இப்படித்தான்… இந்திய வீரர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட பிசிசிஐ!
Send us your feedback to audioarticles@vaarta.com
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் வெற்றிப்பெற்ற இந்திய அணி அடுத்து தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதனால் அடுத்த 44 நாட்களுக்கு பயோபபுள் முறையில் இந்திய வீரர்கள் அனைவரும் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 போட்டிகள் நடைபெறும் என முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தப் பயணமே ரத்துச் செய்யப்படும் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தென்ஆப்பிரிக்கா அகாடமி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தற்போது தென்ஆபிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது.
இதனால் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் டிசம்பர் 12 ஆம் தேதியே மும்பை நட்சத்திர ஹோட்டலுக்குள் வந்துவிடவேண்டும் என்றும் அடுத்த 4 நாட்கள் அவர்கள் பயோபபுள் முறையில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் தற்போது பிசிசிஐ கூறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் 16 ஆம் தேதி தனிவிமானம் மூலம் தென்ஆப்பிரிக்காவிற்கு இந்திய வீரர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
அதைத்தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கவுள்ள இந்திய வீரர்கள் அங்கும் பயோபபுள் முறைக்குள் இருக்க வேண்டும். இந்தப் பயணத்தில் 4 டி20 போட்டிகளும் ஏற்கனவே ரத்துச் செய்யப்பட்டு உள்ளளதால் வரும் 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 19 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியும் 21, 23 என அடுத்தடுத்தப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனால் இந்திய வீரர்கள் 44 நாட்களுக்கு பயோபபுள் முறையில் தங்க வேண்டி இருக்கும் என்று பிசிசிஐ வீரர்களுக்கு அறிவுறித்தி உள்ளது.
இதற்கு முன்பு நடைபெறும் போட்டிகளில் பொதுவாக வீரர்கள் பலரும் போட்டி முடிந்தவுடன் தனிப்பட்ட முறையில் ஊர் சுற்றி கிளம்பி விடுவர். ஆனால் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக இந்திய வீரர்கள் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது 44 நாட்களுக்கு பயோபபுள் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தற்போது பிசிசிஐ அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 18 வீரர்களின் பட்டியலை அறிவித்த பிசிசிஐ நாளை ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கும் வீரர்களின் பட்டியலை அறிவிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி- விராட் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா ( துணை கேப்டன்), கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகம்மது சிராஜ் ஆகியோர் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments