இந்தியா: கொரோனா விஷயத்தில் ஒரே ஆறுதுல் இதுதாங்க... மத்திய அரசு விளக்கம்!!!
- IndiaGlitz, [Monday,June 15 2020]
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதைத் தொடர்ந்து மக்கள் பதட்ட மனநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், உலகளவில் கொரோனா நோய்ப் பட்டியலில் இந்தியா 4 ஆவது இடத்தையும் பிடித்து முன்னேறியிருக்கிறது. இது மிகவும் மோசமான நிலையைக் காட்டுவதாகப் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் தொடர்ந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை 50 விழுக்காட்டை தாண்டியிருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 8,049 பேர் கொரோனா நோய்த்தொற்றில் குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இதனால் குணமடைவோர் சதவீதம் 50.60 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதொரு நல்ல முன்னேற்றம் என வரவேற்கப் படுகிறது. ஆனால் தொடர்ந்து டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காமல் இறந்து போகின்ற செய்தியைப் பார்த்து மக்கள் சற்று பதற்றட்டமான மனநிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலைமையை சமாளிக்க டெல்லியில் ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த இருப்பதாகவும் மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்து இருக்கிறது.
இதுவரை இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து 162,378 பேர் குணமடைந்து உள்ளனர். மருத்துவ மனைகளில் 149,348 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகபடியான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் சில பரிந்துரைகளையும் மத்திய அரசுக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகப்படுத்தப் பட்டு இருக்கின்றன.
சில மாநிலங்களில் தனியார் மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு குறிப்பிட்ட கட்டணமும் நிர்ணயம் செய்யப் பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் 646 அரசு கொரோனா பரிசோதனை நிலையங்கள் மற்றும் 247 தனியார் மையங்கள் என மொத்த 893 மையங்கள் செயல்படுகின்றன. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1,51,432 கொரோனா மாதிரிகள் சேகரிக்கப் பட்டு இருக்கின்றன. இதுவரை சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 56,58614 எனவும் மத்தியச் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது.