கொரோனா பரவல்: நேற்று ஒரேநாளில் 4 ஆவது இடத்தைப் பிடித்து அதிச்சியை ஏற்படுத்திய இந்தியா!!!
- IndiaGlitz, [Wednesday,May 20 2020]
உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 6147 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 4 இடத்தைப் பெற்றிருக்கிறது என்பதுதான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியிருக்கிறது. உயிரிழப்பு 3 ஆயிரத்தைக் கடந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நேற்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,751 பேர். அதில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 20,289 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரேநாளில் உயிரிழப்பும் 1552 ஆக அதிகரித்து இருக்கிறது. அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியிருக்கிறது. உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கவிருக்கிறது.
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 16,517 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பதிவானது. உயிரிழப்பு 1130 ஆக இருந்தது. மொத்தமாக அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 271,885 ஆக பதிவாகியிருக்கிறது. உயிரிழப்பு 17,983. அடுத்ததாக ரஷ்யாவில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,263 ஆக உறுதிசெய்யப் பட்டு இருக்கிறது. உயிரிழப்பு 115 ஆக இருந்தது. அந்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. உயரிழப்பு 2,837 ஆக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து நேற்றைய நிலவரப்படி இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஊரடங்கில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சில நாட்களே ஆன நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உலக நாடுகளோடு ஒப்பிடும்போது 16 ஆவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.பரவல் வேகத்தில் இந்த வரிசை பட்டியலில் 11 ஆவது இடத்தை பிடித்து இருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது.