கொரோனாவில் இருந்து மீண்ட நியூசிலாந்தை பதற வைத்த நபர் இந்தியரா?

இந்தியாவிலிருந்து நியூசிலாந்து சென்ற நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் திடீரென தனிமைப்படுத்தப்படும் மையத்தில் இருந்து தப்பித்து சூப்பர் மார்க்கெட் உள்பட பல பகுதிகளுக்கு சென்று ஊர் சுற்றியதாக வெளிவந்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே கொரோனாவில் இருந்து மீண்ட மிகச் சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இந்நாட்டில் சமீபத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இந்தியாவில் இருந்து நியூசிலாந்து சென்ற ஒருவர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கிருந்து திடீரென தப்பித்து சூப்பர் மார்க்கெட் உள்பட ஒரு சில இடங்களுக்கு சென்று சுமார் ஒன்றரை மணி கழித்து மீண்டும் தனிமைப்படுத்தும் மையத்துக்கு வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவருக்கு 6 மாதம் சிறை அல்லது சுமார் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் சென்ற சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுளனர்.

இதுகுறித்து சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் கூறியபோது அந்த நபர் சூப்பர் மார்க்கெட்டில் அழகுப்பிரிவில் அதிக நேரம் செலவிட்டதாகவும் அங்கு அவர் விதவிதமான செல்பிகளை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். டெல்லியில் இருந்து சென்ற அந்த நபர் இந்தியரா? அல்லது நியூசிலாந்து நாட்டவரா? என்பது குறித்த விபரங்களை போலீசார் இன்னும் தெரிவிக்கவில்லை.