தமிழகத்தில் ஒருவருக்கு புதியவகை கொரோனா உறுதி… சுகாதாரத்துறை தகவல்!!!
- IndiaGlitz, [Tuesday,December 29 2020]
இங்கிலாந்தில் 70% வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தகவலை தமிழகச் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். முன்னதாக கடந்த 27 ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பி வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதையடுத்து அந்த மாணவர் சென்னையின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது ரத்த மாதிரி பூனே ஆயவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸின் உருமாறிய புதிய வகை பரவுவதாகப் பரப்பு ஏற்பட்டது. இந்த புதியவகை கொரோனா வைரஸ் மற்ற வகையைவிட 70% வேகமாகப் பரவுதாகவும் கூறப்பட்டது. இதனால் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களுக்கு 4 ஆம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இங்கிலாந்து நாட்டுடனான விமானப் போக்குவரத்தையும் பல உலக நாடுகள் தடை செய்துவந்தன.
இந்நிலையில் இந்தியாவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்தது. அதையடுத்து இங்கிலாந்தில் இருந்து திரும்பும் அனைவரையும் சுகாதாரத்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதுவரை 6 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் மாதிரி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகத் தமிழகச் சுகாதாரத்துறை கூறியுள்ளது.