இந்தியாவில் 7 ஆவது நாளாக 20 ஆயிரத்தை தாண்டும் கொரோனா பாதிப்பு!
- IndiaGlitz, [Wednesday,March 17 2021]
இந்தியாவில் மக்கள் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் நீங்கி இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கி இருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் எகிற ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் கடந்த 7 ஆவது நாளாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,000 த்தைத் தாண்டுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் உயிரிழந்து உளளதாகவும் இதனால் ஒட்டுமொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்தியாவில் 1,59,044 ஆக அதிகரித்து உள்ளது என்றும் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
அதோடு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி தற்போது 40 வயதிற்கு கீழும் 60 வயதிற்கு மேலும் உள்ள நோய் மற்றும் துணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் 3,50,64,536 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கேரளா, பஞ்சாப், டெல்லி, அரியாணா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.