பாகிஸ்தானுக்கு எதிராக ஆவணங்களை பட்டியலிட்டு ஐ.நா அவையையே தெறிக்கவிட்ட தமிழர்…
- IndiaGlitz, [Tuesday,September 22 2020]
ஜெனீவாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 45 ஆவது கூட்டம் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சார்ந்த செந்தில்குமார் கலந்து கொண்டிருக்கிறார். இவர் இந்தியாவின் வெளியுறவுப் பணி அதிகாரி என்ற முறையில் அக்கூட்டத்தில் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானின் விரோத போக்குகளைப் பட்டியலிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது செந்தில் குமாருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மனித உரிமைகள், அரசியல் சூழ்நிலைகள், பொருளாதாரம், கலாச்சார உரிமைகள், வியன்னா பிரகடனத்தின் அமலாக்கம், நிற, இனப்பாகுபாடு, சகிப்புத்தன்மையற்ற நிலை போன்றவற்றைக் குறித்து விவாதிக்கப்படும் இந்தக் கூட்டத்தில் உறுப்பு நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டிருக்கிறது. இந்த அவையில் பாகிஸ்தானின் அதிகாரியும் பங்கேற்றார்.
இதில் இந்திய அரசின் சார்பில் வெளியுறவு அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான செந்தில்குமார் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய செயல்பாடுகள், இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் பிரச்சாரங்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது அவர் சர்வதேச அரங்கில் மற்றவர்களைப் பற்றி பேசுவதற்கு முன்பு பாகிஸ்தான் முதலில் தனது சொந்த நாட்டை கவனிப்பது நல்லது எனவும் அவர் கூறியிருந்தார்.
அந்த உரையில், பாகிஸ்தானின் மோசமான செயல்பாடுகள் எங்களை ஆச்சர்யப்படுத்த வில்லை என ஆரம்பித்த செந்தில்குமார் பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார். அதில் பத்திரிக்கையாளர்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள், காணாமல் போகும் சமூகச் செயல்பாட்டாளர்கள், காணாமல் போகும் சிறுமிகள், இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும் பெண்கள், பெண்கள் மீது செலுத்தப்படும் அதிகாரங்கள் என அனைத்து தரவுகளையும் அடுக்கடுக்காக எடுத்துக் கூறினார்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் இம்ரான் கானின் புதிய பாகிஸ்தானில் வெளியே செல்பவர்கள் யாரும் வீடு திரும்ப முடியாது என்ற கொள்கையே அமலில் இருந்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் நடக்கும் அச்சுறுத்தல்களையும் அவர் பட்டியலிட்டார். இந்த செயல்பாடுகளால் பல உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவலையும் செந்தில்குமார் அந்த அவையில் பதிவு செய்தார். செந்தில்குமாரின் பேச்சு சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்ததோடு, ஐ.நா. அவையில் இந்தியாவின் கருத்தும் இதுதான் என்று பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
#Breaking #HRC45
— Geeta Mohan گیتا موہن गीता मोहन (@Geeta_Mohan) September 21, 2020
India's Right of Reply #RoR against Pakistan's remarks.
Indian diplomat Senthil Kumar:
"... They say in Imran Khan’s Naya Pakistan (new Pakistan) – you may not return home."@IndiaUNGeneva @marvisirmed @Ahmad_Noorani @GulBukhari https://t.co/TLPcuu9fpS pic.twitter.com/DZIInsjsoj