கொரோனா பரவலைத் தடுக்க மேலும் 5 தடுப்பூசி? மத்திய அரசு அதிரடி!
- IndiaGlitz, [Monday,April 12 2021]
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்து வருவதாகச் சுகாதாரத்துறை அமைச்சகம் அச்சம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 1,68,912 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உயிரிழப்பு 904 ஆக பதிவாகியுள்ளது.
அதோடு கொரோனா பரவலைத் தடுக்க பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறையை சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவுப்படுத்தி வருகிறது. இதனால் நேற்று ஒரேநாளில் 27 லட்சம் பேருக்கு இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நாடுகளில் அமெரிக்காவையே பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. இதுவரை 10 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.
இதையடுத்து இந்தியாவில் நிலவும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டைக் குறைக்கும் பொருட்டு வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக் கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் தற்போதுவரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் உருவாக்கிய கோவிஷீல்டு மற்றும் புனே பாரத் இன்ஸ்ட்டியூட்டின் கோவேக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தவிர்க்கும் பொருட்டு வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டு இருக்கிறது. அதில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசி, நோவோவேக்ஸ், ஸைடஸ் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக எடுத்துக் கொள்ளும் தடுப்பூசி ஆகியவை அக்டோபருக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி இன்னும் 10 நாட்களில் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியுடன் இந்தியாவில் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.