கொரோனா சர்ச்சையில் அமெரிக்காவுடன் கைக்கோர்க்கிறதா இந்தியா???
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கடும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கான காரணங்கள் குறித்து உலக நாடுகளிடையே முரண்பட்ட கருத்துகளும் வாக்கு வாதங்களும் வலுப்பெற்று கொண்டே வருகின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “சீனா உற்பத்தி செய்ததுதான் கொரோனா வைரஸ், அது ஆய்வகத்தில் இருந்து வெளிப்பட்டது என்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது” என வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். அதிபரின் கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியா பல முறை செய்தியாளர்களிடம் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வந்தார். மேலும், அந்நாட்டின் ஃபாக்ஸ் நியூஸ் இதுபற்றிய விவகாரங்களை செய்தியாகவும் வெளியிட்டது.
இதைத்தவிர, ஆஸ்திரேலிய பிரதமர் கொரோனா வைரஸ் பரவல் பற்றி வெளிப்படையான விசாரணைத் தேவை. நடைபெற இருக்கும் உலகச் சுகாதார மாநாட்டில் இதுகுறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதற்கு ஆதரவான கோரிக்கையை உலக நாடுகள் முன்வைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், பிரிட்டன் பொதுச் சுகாதாரத் துறை அமைச்சர் பென் வாலஸ், சுவீடன் சுகாதாரத் துறை அமைச்சர் லீனா ஹாலன்கிரன் போன்றோர் கொரோனா வைரஸ் பரவல் பற்றி தெளிவான விசாரணை தேவை எனவும் கருத்து கூறியிருந்தனர்.
இந்நிலையில் உலகச் சுகாதார அமைப்பின் 2020 ஆண்டிற்கான உலக மாநாடு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் சீனாவுக்கு எதிராக பலத்த கூட்டணி இருக்கும் என அரசியல் ஆலோசகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த மாநாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி விசாரணை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்படும் என வெளிப்படையாக ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதோடு, இந்த நாடுகள் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டது என்ற கருத்தில் உடன்பாடு கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி அதன் பரவும் தன்மையை பொது வெளியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
உலக நாடுகளில் இப்படியான விவாதங்கள் நடைபெற்று வரும் சமயத்தில் சிறு வணிகங்களுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு புது கருத்தை வெளியிட்டு இருக்கிறார். “கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல, அது ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த வைரஸோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்” எனச் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். தற்போது இந்தக் கருத்துதான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைப் பற்றி இதுவரை இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் யாரும் விமர்சனம் வைக்காத நிலையில் முதல் முறையாக நிதின் கட்கரி இத்தகைய கருத்தை கூறியிருக்கிறார்.
உலகச் சுகாதார அமைப்பின் இந்த ஆண்டுக்கான நிர்வாகக் குழுவில் இந்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர். WHO, சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது எனக் கூறி அந்த அமைப்புக்கு வழங்கிவரும் நன்கொடையையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்திருக்கிறார். இந்நிலையில் இந்த மாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. ஒருவேளை மாநாட்டில் கலந்து கொண்டால் அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா கருத்துத் தெரிவிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இதுவரை கொரோனா வைரஸ் பரவல் பற்றி எந்த கருத்தையும் இந்தியா தெரிவிக்காத நிலையில் முதல் முறையாக நிதின் கட்கரி உற்பத்தி செய்யப்பட்டது எனத் கூறியிருப்பது ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதற்கான முதல்படியாக இருக்கும் எனவும் பேசப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments