உலகில் பாலியல் வன்கொடுமைகளுக்கு தலைநகராக இந்தியா உள்ளது - ராகுல் காந்தி.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடப்பதில் உலகின் தலைநகராக இந்தியா உருவாகி விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டர் சம்பவத்துக்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சித்துள்ளனர்.

இதுபோலவே உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்திற்கு வரும்போது 5 பேர் அவரை உயிரோடு எரித்தனர். இதில் பலத்த காயமடைந்த அந்தப்பெண், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் உயிரிழந்தார்.அவர் முன்பு அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில் இதுபற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வேதனை தெரிவித்துள்ளார்.வயநாட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடப்பதில் உலகின் தலைநகராக இந்தியா உருவாகி விட்டது.தனது சொந்த மகளையும், சகோதரியையும் காப்பாற்ற முடியாத நிலை இந்தியாவில் ஏன் நீடிக்கிறது என உலக நாடுகள் கேள்வி எழுப்புகின்றன. உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு ஆளானார். ஆனால் அதுபற்றி பிரதமர் மோடி ஒருமுறை கூட வாய்திறக்கவில்லை’’ என ராகுல் காந்தி பேசினார்.

தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் நாட்டில் நடந்து வருவதால் இது சம்பந்தமாக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்களும் கோரிக்கைகளை இணையதளங்களில் வைத்து வருகின்றனர்.