இந்தியா எங்களுக்கு அண்ணன்… முக்கிய வீரரின் உருக்கத்திற்கு என்ன காரணம்?
- IndiaGlitz, [Saturday,April 09 2022] Sports News
இலங்கை கடுமையான பொருளாதாரப் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் எங்கள் நேரம் கடந்துவிட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டிவருகிறது என இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கும் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கா, சனத் ஜெயசூர்யா ஆகியோர் மக்களுக்கு ஆதரவாக நிற்பதோடு இந்தியா செய்துவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரோஷன் ஹாநாம தான் அளித்துள்ள பேட்டியில் இலங்கையின் நடுத்தர வர்க்கம் மெதுவாக அழிக்கப்பட்டு வருவதாகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வுகாண தலைவர்கள் முன்வராத வரை மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.
1996 உலகக்கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்த மகாநாம இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய சிக்கலுக்கு நாட்டின் தலைவர்களே காரணம் என்றும் ஆட்சியில் மாற்றம் ஏற்பட வேண்டும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வை காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தச் சமயத்தில் இந்தியா எங்களுக்கு உறுதுணையாக இருந்துவருகிறது. நல்ல சமயங்களிலும், மோசமான காலங்களிலும் உற்ற நண்பனாக இந்தியா எங்களுக்குத் துணை நிற்கிறது. இந்தியா எப்போதுமே மூத்த சகோதரன். பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் எங்களுக்கு நல்ல உறவுள்ளது. அவர்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்குத் தேவை. இதனைத் தவறான நோக்கமாகப் பார்க்க வேண்டாம்.
மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எனது குடும்பத்தாரும் வரிசையில் நிற்கின்றனர். இதனால் நான் மக்களுக்கு ஆதரவாகத் தெருக்களில் இறங்கியுள்ளேன். இந்தப் போராட்டத்தின் மூலம் ஒவ்வொருவரிடமும் செல்ல வேண்டும். அனைவரையும் ஒங்கிணைத்து செயலாற்ற வேண்டும். இந்தப் போராட்டம் மக்களை வேறுபடுத்தவில்லை, ஒன்றுபடுத்தி இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது என்று ரோஷன் ஹாநாம பேசியுள்ள கருத்துக்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.