ஊரடங்கால் அதிக கர்ப்பம்: இந்தியாவில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு என ஐநா தகவல்
- IndiaGlitz, [Friday,May 08 2020]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கும், அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மே 4ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கால் பெரும்பாலானவர்களுக்கு வேலை இல்லை என்பதும் ஒரு சிலர் மட்டும் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் அதிக கர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐநாவின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் இந்த ஊரடங்கு காரணமாக பிறக்க வாய்ப்பு உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மார்ச் மாதம் மட்டும் கோடிக்கணக்கில் கர்ப்பங்கள் உருவாகியிருப்பதாகவும், இதனை அடுத்து வரும் டிசம்பர் மாதம் 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் பிறக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளோடு, பிரசவ பராமரிப்பு மற்றும் கர்ப்பிணிகள் பராமரிப்பு ஆகியவற்றுக்கும் இந்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் யூனிசெப் அமைப்பு இந்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது