லஞ்சத்தில் கொழிக்கும் இந்தியா! உலக அளவில் எந்தனையாவது இடம் தெரியுமா???

  • IndiaGlitz, [Friday,November 20 2020]

 

உலக அளவில் லஞ்சத்தில் இந்தியா 77 ஆவது இடத்தில் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் அன்னாபொலிஸ் நகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரேஸ்லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் எனும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் தொழில் துறைகளில் நிலவும் லஞ்ச நிலைமையை பட்டியல் இட்டு சுட்டிக்காட்டி வருகிறது. அந்தப் பட்டியலில் 194 உலக நாடுகளில் இந்தியா 77 ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது.

அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கம், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறது. அப்படி தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலில் 194 நாடுகளில் இந்தியா 44 புள்ளிகளை பெற்று 77 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. கடந்த ஆண்டு 48 புள்ளிகளைப் பெற்று 78 ஆவது இடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தென்சூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. டென்மார்க், நார்வே, சுவீடன், நியூசிலாந்து போன்ற நாடுகளில் லஞ்சம் குறைவாக இருக்கிறது எனவும் அந்தப் பட்டியல் சுட்டிக் காட்டியுள்ளது.

பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா நல்ல நிலைமையில் இருக்கிறது. இதில் அண்டை நாடான பூடான் 37 புள்ளிகளுடன் 48 ஆவது இடத்தில் இருக்கிறது. மேலும் லஞ்சம் அதிகமாக வாங்கும் நாடான சீனா தனது அதிகார வர்க்கத்தை தொடர்ந்து ஒழுங்குப்படுத்துவதன் மூலம் அரசு அதிகாரிகளின் லஞ்ச கோரிக்கை வாய்ப்புகளை குறைத்துள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.