உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் சாதனை
- IndiaGlitz, [Monday,May 06 2019]
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா மே மாதம் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கிவிட்டது. முதல் போட்டியான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளின் போட்டிக்கு கூட இன்னும் டிக்கெட்டுக்கள் முழுமையாக விற்பனை ஆகவில்லை.
ஆனால் அதற்குள் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் முழுமையாக விற்று தீர்ந்துவிட்டன. கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எந்த தொடரிலும் விளையாடவில்லை. இடையில் சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளது.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் காரணமாக உலகக்கோப்பை போட்டியிலும் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட கூடாது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றானர். எனவே இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது., போட்டி நேரத்தில் இந்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே இந்த போட்டி நடப்பதை உறுதி செய்ய முடியும். இந்த நிலையில் போட்டி நடைபெறுவது உறுதியாக தெரியாத நிலையிலும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் முழுவதும் 48 மணி நேரத்தில் விற்பனையாகி சாதனை செய்துள்ளது.