சென்னையில் சுயாதீனத்  திரைப்பட விழா

  • IndiaGlitz, [Thursday,January 30 2020]

 

சென்னையில் தமிழ் ஸ்டூடியோ என்ற ஒரு அமைப்பு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் சுயாதீனத் திரைப்பட விழாவினை நடத்திவருகிறது. சில நேரங்களில் இந்தத் திரைப்பட விழா மக்களிடம் இருந்து நிதி பெற்று நடத்தப் படும் ஒரு திரை விழாவாகவும் அமைகிறது. ஒரு படத்தினைப் பார்ப்பதற்கு நாம் குறைந்த பட்சம் 200 ரூபாய் செலவு செய்கிறோம் . இங்கு அதே 200 ரூபாய்க்கு சினிமா தியேட்டங்களில் பார்க்க வாய்ப்பு இல்லாத உலகப் புகழ் பெற்ற இயக்குநர்களின் படங்கள், அவர்களின் கலந்துரையாடல்கள், ஆவணப் படங்கள், குறும்படங்கள், அதைப் பற்றிய கலந்துரையாடல், சினிமா துறை சம்பந்தமான வகுப்புகள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் என்றால் சினிமா ஆர்வலர்களுக்கு கொண்டாட்டம் தான். வருகிற பிப்ரவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்களில் சுயாதீனத் திரைப்பட விழா நடைபெற உள்ளது. தற்போது திரைப்பட விழாவிற்கான நுழைவு சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட விஷயங்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சுற்றுச்சூழலை மையமாகக் கொண்டு படங்கள், கலந்துரையாடல்கள் போன்றவை நடத்தப் பட இருக்கின்றன. அதோடு போர்த்துக்கல் - பிரேசில் ஓவியரான ஃப்ரான்ஸ் க்ராஜ்பெர்க்கின் ஓவியங்களின் தொகுப்புகள் திரைப்பட விழாவில் காட்சிப் படுத்தப் பட உள்ளன. ஓவியங்களைப் பற்றிய கலந்துரையாடலும் நடக்க இருக்கிறது.

ஊடகத்துறை சார்ந்த மாணவர்கள், உலக அரசியல், சுற்றுச்சூழல், உலகச் சினிமா பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். சுயாதீனத் திரைப் பட விழாவிற்கு குறைந்த நுழைவுச் சீட்டுகள் (Entreance ticket) மட்டுமே விற்கப்படும் என்பதால் சினிமா ஆர்வலர்கள் இதனை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். நுழைவுச் சீட்டினைப் பெறுவதற்கு பியூர் சினிமா அலுவலகத்தில் நேரடியாக பணம் செலுத்தி நுழைவு சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களது திரைப்பட விழா வருகையினைப் பதிவு செய்து கொள்ளலாம்.

ரூ.200 க்கு 35 ஆவணப்படங்கள், உலகப் படங்கள், குறும்படங்களின் தொகுப்பு கிடைக்கிறது என்றால் சினிமா ஆர்வலர்களை நிச்சயமாக உற்சாகப் படுத்தும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகவே அமையும். பியூர் சினிமா கட்டிடத்தில் சினிமாவைப் பற்றிய அனைத்து நூல்களும் அடங்கிய ஒரு புத்தகக் கடையும் இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.