பேசும் படம்: வெள்ளத்தில் மூழ்கினாலும் மூழ்காத தேசிய பற்று

  • IndiaGlitz, [Wednesday,August 16 2017]

இந்திய மக்கள் மொழி, இனம், மதம், ஜாதி போன்ற பலவகைகளில் பிரிந்து இருந்தாலும் தேசிய ஒருமைப்பாடு என்று வரும்போது அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்பது பல விஷயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உண்மையான இந்தியனுக்கு அவனது ரத்தத்திலேயே தேசியப்பற்று கலந்து இருக்கும். அந்த வகையில் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் மீண்டும் ஒருமுறை இந்தியர்களின் தேசிய பற்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் இடுப்பளவுக்கும் மேல் வெள்ள நீர் ஓடுவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளுக்கே அம்மாநில மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு நேற்று தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு மாணவர்கள் தண்ணீரில் நின்றுகொண்டே தேசிய கொடியை மேல்நோக்கி பார்த்து சல்யூட் அடிக்கும் புகைப்படம் ஒன்றை இந்த பள்ளியின் ஆசிரியர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த பள்ளி ஆசிரியர்களின் தேசிய பற்றுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த புகைபப்டத்தை கமல்ஹாசன், கஸ்தூரி உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.