கொரோனாவால் அதிகரித்த உயிரிழப்பு: புதைக்க இடமில்லாமல் பிரேசில் செய்த காரியம்!!!
- IndiaGlitz, [Monday,June 15 2020]
உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துவரும் நாடுகளுள் ஒன்றான பிரேசில் தற்போது ஒரு மோசமான காரியத்தைச் செய்துவருவதாக அந்நாட்டு மக்கள் கொதிப்படைந்து உள்ளனர். உலகிலேயே அதிக கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட முதல் நாடு அமெரிக்கா. இதுவரை அந்நாட்டில் 1 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் மாகாணத்தில் யாருமே பயன்படுத்தாத ஒரு தீவினை கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு அந்நாடு பயன்படுத்தி வருகிறது. இதைத்தவிர உலகில் பல நாடுகள் கொரோனாவால் உயிரிழப்பவர்களைப் புதைப்பதற்கு என்றே பல புதிய இடங்களையும் இடுகாடுகளையும் அமைத்து வருகின்றனர். இந்த விஷயத்தில் ஈக்வடார் தெருக்களில் கொரோனா நோயாளிகளை வீசி வந்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் பிரேசில் இறந்தவர்களைப் புதைப்பதற்கு ஒரு மோசமான முடிவினை எடுத்து இருக்கிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களைப் புதைப்பதற்கு இடமில்லாத நிலையில் பிரேசில் நாடு தற்போது, ஏற்கனவே புதைக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான பிணங்களைத் தோண்டி எடுத்து வருகிறது. இப்படி ஏற்கனவே புதைக்கப்பட்ட பிணங்கள் 3 ஆண்டுகளைத் தாண்டியிருந்தால் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு புதிய பிணங்களை அந்த இடத்தில் புதைத்து விடலாம் என துரிதமான நடவடிக்கையில் அந்நாட்டு சுகாதாரத் துறை ஈடுபட்டு வருகிறது.
இச்செயலுக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமானதற்கு அதிபர் பொலி சொனாரோதான் காரணம் எனவும் அவர் கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார் எனவும் விமர்சனங்கள் வைக்கப் பட்டு வருகின்றன. கொரோனா பரவல் ஆரம்பக்கட்டத்தில் “புதிய வைரஸ் ஒரு காய்ச்சல் போன்றதுதான்” என்ற கருத்தை அதிபர் வெளிப்படுத்தி வந்தார். மேலும் கொரோனா எங்கே இருக்கிறது காட்டுங்கள், இங்கே இருக்கிறதா என செய்தியாளர்களைப் பார்த்து விளையாட்டாக கேட்டார். மேலும் ஊரடங்கினைப் பிறப்பிக்க வேண்டும் என கோரிய சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு 43,389 ஆக அதிகரித்து இருக்கிறது. இறந்தவர்களை புதைப்பதற்கு இடமில்லாத சுகாதாரத் துறை தற்போது கல்லறைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பிரேசிலை அடுத்து UK வில் 41,698 உயிரிழப்புகளும் இத்தாலியில் 34,345 உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. ஸ்பெயின் 27,136, பிரானஸ் 29,407, மெக்சிகோ 17,141 உயிரிழப்புகளையும் சந்தித்து இருக்கின்றன.