21 ஆண்டுகளுக்கு பின் ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை
- IndiaGlitz, [Saturday,November 18 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நேற்றிரவு அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் பத்து பேர் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். நீதிபதியிடம் சிறப்பு அனுமதி பெற்று அவர்கள் சோதனை செய்ததாகவும், ஜெயலலிதா வீட்டில் அவரிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் மட்டுமே அவர்கள் சோதனை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சுமார் நான்கு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் 2 லேப்டாப், ஒரு பென் டிரைவர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள் சிலவற்றை வருமான வரித்துறையினர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. சோதனையின்போது ஜெயா டிவி சி.இ.ஓ விவேக் மற்றும் பூங்குன்றன் ஆகியோர் உடனிருந்தனர்.
21 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெயலலிதா வீட்டில் நடந்துள்ள இந்த சோதனையால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சோதனைக்கு மத்திய அரசின் அரசியல் சதியே காரணம் என்று தினகரன் அணியில் உள்ள தலைவர்கள் கூறிவருகின்றனர். இருப்பினும் வழக்கம்போல் இந்த சோதனை குறித்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.