பிட்காயினில் முதலீடு செய்தவர்களுக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை அதிரடி

  • IndiaGlitz, [Tuesday,December 19 2017]

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தி ஆகிவருவது பிட்காயின். இந்தியாவை பொறுத்தவரையில் பொருளாதார அறிவு பெற்றவர்கள் கூட பிட்காயின் குறித்து தெரியாத நிலை கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் தற்போது ஆன்லைன் வர்த்தகம் சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில் இந்தியாவிலும் பிட்காயின் குறித்து பலர் தேரிந்து வைத்துள்ளனர்.

சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை என்றாலும் பிட்காயின் வணிகத்தை அரசு ஊக்குவிப்பது இல்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்தி வரும் நிலையில் பிட்காயின் என்றால் என்ன? என்பது குறித்து ஒரு சிறு விளக்கம்

பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்று. இது உலகளாவிய பணம் செலுத்தும் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம். தற்போது இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாய் ஆகும்.

இந்த நிலையில் இந்தியாவில் கருப்புப் பணத்தை பிட் காயினில் ஒருசிலர் முதலீடு செய்வதாக வந்த தகவலையடுத்து, பிட் காயினில் முதலீடு செய்தவர்களின் பட்டியலை தயார் செய்து நோட்டீஸ் அனுப்பபப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பிட்காயின் வாங்குவது குறையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.