மக்கள் உயிர் தான் முக்கியம், வருமானம் அல்ல: டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கருத்து
- IndiaGlitz, [Thursday,May 14 2020]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த இந்த விசாரணையில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘ டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான நடைமுறைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 500 டோக்கன் நடைமுறையை பின்பற்ற உள்ளதாகவும், மதுபான விற்பனை நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதாகவும் வாதிட்டார்.
ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தேவையான மென்பொருள் மற்றும் செயலியை வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசுத்தரப்பில் விரிவான பதில்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அதற்கு அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடியபோது, ‘மது பழக்கம் ஒரு கொடிய நோய் என்றும் ஏழை - எளிய மக்கள், தங்களின் வருமானத்தில் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றி கொள்ளாமல் மதுபான கடைகளுக்கு செலவழிப்பதாகவும் வாதாடினர். மேலும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க டாஸ்மாக் முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படவில்லை எனவும் வாதாடினர்.
இருதரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘டாஸ்மாக் வழக்கில் மக்கள் உயிர் தான் முக்கியம் வருமானம் அல்ல என்றும், அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக இருக்கும் நீதிமன்றம், பொது அமைதியும், சட்டம் - ஒழுங்கும் சீர்குலைந்தால் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்தனர். நாளையும் இந்த வழக்கின் விசாரணை தொடரவுள்ளதால் நாளைய விசாரணைக்கு பின் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.