சைபர் க்ரைம் குற்றங்களை தோலிரிக்கும் 'இணையதளம்'. திரை முன்னோட்டம்
- IndiaGlitz, [Wednesday,May 17 2017]
கடந்த சில நாட்களாகவே ரான்சம்வேர் என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் வரும் வெள்ளி அன்று சைபர் க்ரைம் குறித்த குற்றங்கள் குறித்து அலசும் திரைப்படமான 'இணையதளம்' வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சமகாலத்தில் நடக்கும் டெக்னாலஜி கிரிமினல்கள், சட்டமீறல்கள், அவற்றில் இருந்து பாதுகாப்பது ஆகியவற்றை இன்றைய இளைஞர்களுக்கு சொல்லும் வகையில் அலசப்பட்டுள்ளது.
சங்கர் மற்றும் சுரேஷ் ஆகிய இரட்டையர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் சார்ட்டட் அக்கவுண்டண்ட் மற்றும் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் உள்ள ஆர்வம் காரணமாக தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம் தான் 'இணையதளம்
கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் ஸ்வேதா மேனன் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, சுகன்யா, டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரா, ஈரோடு மகேஷ், உள்ளிட்ட பலர் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில், ராஜேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் டிரைலர் மிரட்டலாக இருந்ததில் இருந்தே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 'சமூக வலை' என்ற குறும்படத்தின் விரிவாக்கமான இந்த படம் சைபர் குற்றங்களை விரிவாக அலசுவதால் கணினியை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் முக்கிய செய்தியை கூறுவதாக அமைந்துள்ளது என்று படக்குழுவினர் உறுதி கூறுகின்றனர்.
இந்த படம் மக்களை எந்த அளவுக்கு கவர்ந்தது என்பதை வரும் வெள்ளியன்று திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.