கோயம்பேடு தொடர்பால் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா: எங்கே தெரியுமா?
- IndiaGlitz, [Sunday,May 10 2020]
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களுக்கு 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த நான்கு நாட்களுக்கும் தேவையான காய்கறிகளை வாங்க கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
சில்லரை வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது. இதன் பாதிப்பு ஓரிரு வாரங்களில் தெரியும் என அப்போதே சமூக ஆர்வலர்கள் எச்சரித்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் கோயம்பேடு காய்கறி சந்தையில் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவள்ளூரில் 290 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இம்மாவட்டத்தில் மட்டும் 500ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.