பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட வெளிமாநில தொழிலாளர்களின் நன்றிக்கடன்!
- IndiaGlitz, [Thursday,April 23 2020]
ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட 54வது தொழிலாளர்கள் அந்த பள்ளிக்கு செய்த சேவையை பார்த்து அந்த பகுதி மக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்சானா என்ற பகுதியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 54 தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த அறிகுறி இல்லை எனினும் 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டது
இதனை அடுத்து அந்த தொழிலாளர்களுக்கு தேவையான மூன்று வேளை உணவு, மருத்துவ உதவிகள் மற்றும் முறையான பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டது. வெளிமாநிலத்தில் இருந்து வேலைக்கு வந்த தங்களுக்கு அரசு இந்த அளவுக்கு உதவி செய்வதை நினைத்து நெகிழ்ந்து அந்த தொழிலாளர்கள், பதிலுக்கு நன்றி கடனாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தனர்
உடனடியாக அந்த பள்ளி நிர்வாகிகளிடம் அழைத்து பேசிய தொழிலாளர்கள், பாழடைந்து இருக்கும் பள்ளியை நாங்கள் சீரமைத்து தருகிறோம். அதற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் செய்த நிதி உதவியின் அடிப்படையில் பள்ளிக்கு தேவையான பெயிண்ட்கள் பிரஷ்கள் ஆகியவை வாங்கி கொடுக்கப்பட்டன. உடனடியாக களத்தில் இறங்கிய அந்த தொழிலாளர்கள் மிகவும் பாழடைந்து கிடந்த அந்த பள்ளியை தற்போது பெயிண்ட் அடித்து புத்தம் புதிய கட்டிடமாக மாற்றிவிட்டனர். இதனை அடுத்து அந்த பள்ளி தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது என்பதும் கொரோனா பிரச்சனை முடிவடைந்து பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் ஆச்சரியமடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிமாநில தொழிலாளர்கள் செய்த இந்த உதவிக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்