கொரோனா பீதியில் 10 டோஸ் வேக்சின் செலுத்திக்கொண்ட நபர்… விளைவு என்ன?

  • IndiaGlitz, [Thursday,December 16 2021]

நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் குறித்து அதிக அச்சம் கொண்ட நபர் ஒருவர், ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட விவகாரம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன.

இதையடுத்து நியூசிலாந்து நாட்டில் கொரோனா அச்சம் கொண்ட ஒரு நபர் வெவ்வேறு மையங்களுக்கு சென்று ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கெண்டதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் அளவுக்கு மீறி கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டால் உடல்நலக் கோளாறு எதுவும் ஏற்படாது. ஆனால் அந்த நபர் உடல்நலச் சோர்வால் பாதிக்கப்படலாம் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய தடுப்பூசி நிபுணர் ஹெலன் பெட்டூசிஸ்- ஹாரிஸ், இந்த நபரின் செயல் மிகவும் சுயநலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனாலும் இப்படி அதிக டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் பாதிப்பு எதுவும் வராது. மேலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கொரோனா தடுப்பூசி தீவிர நோய்ப் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் தவிர்ப்பது தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர் குறித்து வேறுவிதமான சில தகவல்களும் கூறப்படுகின்றன. அதாவது தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத சிலர் அந்த நபருக்கு பணம் கொடுத்து, தங்களது அடையாள அட்டையைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வற்புறுத்தியதாகத் தகவல் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.