மத போதகரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 10 ஆயிரம் பேர்: கொரோனா அச்சத்தால் 3 கிராமங்களுக்கு சீல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், திருமணம், மரணம் உள்ளிட்ட வீட்டில் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகர் ஒருவரின் இறுதி சடங்கில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டதால் அந்த பகுதியில் உள்ள மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் உள்ள அனைத்திந்திய ஜமாத் உல்மா என்ற அமைப்பின் துணைத்தலைவர் கைருல் இஸ்லாம் என்பவர் கடந்த சில தினங்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்தார். 87 வயதான அவருடைய இறுதிச்சடங்கு ஜூலை 2ம் தேதி நடைபெற்றது. இவருடைய மகன் அந்த பகுதியில் உள்ள எம்எல்ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இறுதிச் சடங்கில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும், இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல் உள்பட எந்த வித அரசின் விதி முறைகளையும் கடைபிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அசாமில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்த இறுதிச் சடங்கு காரணமாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தை சுற்றியுள்ள 3 கிராமங்களுக்கு அசாம் மாநில சுகாதாரத்துறை சீல் வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல் துறை மற்றும் மாவட்ட நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது என்பதும் மறைந்த கைருல் இஸ்லாம் மகன் உள்பட பலரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதபோதகரின் இறுதிச் சடங்கு நடைபெற்ற பகுதியில் மூன்று கிராமங்கள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout