167 வருட வரலாற்றில் இதுதான் முதல்முறை- திடுக்கிட வைக்கும் இந்திய ரயில்வே துறையின் அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Thursday,August 13 2020]
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் 23 இரவு முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அன்று நிறுத்தப்பட்ட ரயில்வே போக்குவரத்துத்துறை இன்றுவரை இயக்கப்படாமல் இருக்கிறது. ஊரடங்கில் பல விதிமுறைகளில் தளர்வு கொண்டுவந்த பிறகும் மத்திய ரயில்வே மட்டும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் இந்திய ரயில்வே கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை மத்தியப் பிரதேச மாநிலத்தின் சந்திரசேகர் கவுன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டுப் பெற்றுள்ளார். அதில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்களில் இந்திய ரயில்வேக்கு கிடைத்த வருமானத்தைவிட இழப்பீடு அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் ரயில்வே பயணத்திற்கு விண்ணப்பித்த டிக்கெட்டுக்களுக்கான இழப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய ரயில்வே அறிவித்து இருந்தது. இதனால் புக் செய்யப்பட்ட தொகை அப்படி மீண்டும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருவாயைவிட இப்பீட்டுத் தொகை மைனஸ் விகிதத்தை நோக்கி சரிந்துகொண்டே போவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகளுக்கு திரும்ப செலுத்தப்பட்ட ரீபண்ட் பணம் ரூ.531 கோடியே 12 லட்சமாக இருந்தது என்றும் மே மாதத்தில் ரீபண்ட் செய்யப்பட்ட பணம் ரூ.145 கோடியே 24 லட்சமாக இருந்தது எனவும் தெரியவந்துள்ளது. அதைத்தவிர ஜுன் மாதத்தில் ரூ.390 கோடியே 60 லட்சம் பணம் பயணிகளுக்கு திரும்பக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரயில்வேயின் வருமான விகிதம் மைன்ஸ்ஸில் செல்வதாகவும் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில் போக்குவரத்துத் துறையின் செய்தித் தொடர்பாளர் டி.ஜே.நரைன் கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலான டிக்கெட்டுகளை மட்டுமே பயணிகள் பதிவு செய்திருந்தனர். பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களுக்கான பணத்தை மீண்டும் பயணிகளுக்கு வழங்கி வருகிறோம். இதனால் வருமானம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஆனால் சரக்குப் போக்குவரத்து தொடர்ந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு ரூ. 2 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. பயணிகளின் போக்குவரத்தில் இழந்த பணத்தை சரக்குப் போக்குவரத்தில் ஈடுகட்டி வருகிறோம் எனத் தெரிவித்து உள்ளார்.