இப்படியெல்லாம் செய்யாதீங்க: ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் அறிவுரை

  • IndiaGlitz, [Monday,April 22 2019]

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'காஞ்சனா 3' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் ஃபேமிலி ஆடியன்ஸ்கள் இந்த படத்திற்கு குவிந்து வருவதால் இந்த படம் வசூல் ரீதியில் வெற்றிப்படமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் அஜித், விஜய் ரசிகர்களை போலவே ராகவா லாரன்ஸ் ரசிகர்களும் 'காஞ்சனா 3' திரைப்படம் வெளியான நாளில் திரையரங்குகளில் ராகவா லாரன்ஸ் கட் அவுட், பேனர்களை வைத்து பாலாபிஷேகம் செய்தனர். ஒரு ரசிகர் ஒருபடி மேலே போய் ராட்சத கிரேனில் தொங்கிக்கொண்டே ராகவா லாரன்ஸ் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தார். ரசிகரின் இந்த ஆபத்தான செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்ததோடு, ராகவா லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு இதுகுறித்து அறிவுரை கூறுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ராகவா லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்புள்ள ரசிகர்கள், நண்பர்களுக்கு.. இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன். எனது பேனருக்கு ரசிகர் ஒருவர் கிரேனில் தொங்கியபடி பாலாபிஷேகம் செய்வதைப் பார்த்தேன். அந்த வீடியோவைப் பார்த்து எனக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது.

உங்களது உயிரை பணயம் வைத்து, உங்களுக்காக வீட்டில் காத்திருக்கும் உங்கள் உறவுகளின் உணர்வுகளை மதிக்காது, இது போன்ற செயல் மூலம் நீங்கள் அன்பை வெளிப்படுத்த அவசியமில்லை. என் மீதான அன்பை வெளிப்படுத்த தயவு செய்து இப்படியான அபாயகரமான வேலைகளை செய்ய வேண்டாம். இதை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள் உங்கள் அன்பை என்னிடம் நிரூபிக்க வேண்டும் என விரும்பினால் பள்ளிக் கட்டணமும் புத்தகக் கட்டணமும் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுங்கள். வயது முதிர்ந்த பலர் உணவின்றி வாடுகின்றனர். அவர்களுக்கு உணவு அளியுங்கள். இது போன்ற செயல்கள்தான் என்னை மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ளச் செய்யும்.

அதைவிடுத்து உயிரைப் பணையம் வைத்து நீங்கள் செய்யும் பாலாபிஷேகங்கள் என்னை நெகிழச் செய்யாது. எனது ரசிகப் பெருமக்களே இனி இதை எப்போதும் நினைவில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.