தமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்!
- IndiaGlitz, [Saturday,June 12 2021]
தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் படிப்புக்கு சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-21 ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் நேரடியாக உயர் வகுப்புகளுக்கு செல்ல முடியும். இந்நிலையில் எந்த விதிமுறைகளைப் பின்பற்றி 10 ஆம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்புக்கு சேர்க்கை நடத்துவது, அதேபோல 12 ஆம் வகுப்பில் இருந்து உயர்கல்விக்கு என்ன விதிமுறைகளைப் பின்பற்றுவது என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அனைத்து தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு மாணவர்களின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகளை வகுக்க, குழு அமைத்து ஆய்வு செய்யப்படுகிறது என்றும் அண்ணாமலை, பெரியார், காமராஜ் போன்ற பல்கலைக் கழகங்களின் முறைகேடு பற்றி விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.