close
Choose your channels

அசாத்திய அரசியல் வெற்றி; யார் இந்த பிரசாந்த் கிஷோர்? தமிழகத்தில் இவரது வியூகம் பலிக்குமா?

Thursday, February 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அசாத்திய அரசியல் வெற்றி; யார் இந்த பிரசாந்த் கிஷோர்? தமிழகத்தில் இவரது வியூகம் பலிக்குமா?

 

இந்தியாவில் ஐபேக் நிறுவனத்தின் அரசியல் வியூகங்கள் மிகவும் பிரபலம். இந்த நிறுவனம் யார் பின்னால் நிற்கிறதோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று பெரும்பாலும் நம்பப் படுகிறது. முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தங்களின் நலத் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி ஓட்டுக் கேட்டு வெற்றி பெறுவார்கள். ஆனால் இன்று கட்சிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு அதன் மூலமாக வெற்றி பெறும் நவீன அரசியலுக்குள் அடி எடுத்து வைத்திருக்கின்றன.

தேர்தல் களத்தில் நம்பியார் காலத்து டெக்னிக்கை பயன்படுத்தினால் வெற்றி பெற முடியாது என்று இந்தியக் கட்சிகளுக்கு நன்கு தெரிந்து இருக்கிறது. மக்கள் மத்தியில் நெருக்கமான தலைவராகத் தன்னை காட்டிக் கொள்வதில் அனைத்துக் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு நல்ல திட்டங்களை அறிவிப்பதற்கு முன்னால் மற்ற கட்சிகளின் புகழைத் தரை மட்டமாக்கும் உக்தியை பல கட்சிகள் தற்போது பயன்படுத்தி வருகின்றன. இப்படி குதர்க்கமான வியூகங்களை வகுத்துக் கொடுப்பதற்கு என்றே இந்தியாவில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்படியான ஒன்று தான் பிரசாந்த் கிஷோர் தலைவராக பங்கு வகிக்கும் ஐபேக் நிறுவனம்.

தேர்தல் ராஜதந்திரி, நவீன சாணாக்கியன் என்று அழைக்கப் படும் பிரசாந்த் கிஷோர் தற்போது இந்திய அரசியலையே இயக்கும் சக்தி படைத்தவராக வளர்ந்து நிற்கிறார்.  ஒரு மாநிலத்தில் யார் முதல்வராக வர வேண்டும் என்பதை நிர்ணயிப்பதில் இவரின் பங்கு அதிகம். இதை அரசியல் தலைவர்களும் நம்புகின்றனர் என்பது தான் ஆச்சரியம். எப்படி இவ்வளவு பெரிய ஆளுமையாக உருவானார்? இந்திய அரசியலில் இவரது பங்கு என்ன? இவர் வியூங்கள் எப்படி எடுபடுகிறது? இந்திய அரசியல் நவீன களத்தில் பயணிக்கிறதா? என்பதைக் குறித்து விரிவான விவாதத்தை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகத் தற்போது மாறியிருக்கிறது. குஜராத், பீகார், தெலுங்கானா, டெல்லியை அடுத்து தமிழக அரசியலில் இவர் தலையிட போகிறார் என்பதுதான் உச்சப் பட்சம்.

யார் இந்த பிரசாத் கிஷோர்?

ஐ.நா. சபையின் பொது சுகாதார துறை அதிகாரியாக மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் பணியாற்றியவர் தான் பிரசாத் கிஷோர். ஐ.நா. சபையின் சுகாதார துறை அலுவலராக சுமார் 8 வருடங்கள் பணியில் இருந்திருக்கிறார். அந்த அனுபவம் இவரை தேர்ந்த மனிதராக மாற்றி இருக்கிறது என்றே சொல்லலாம். சமூகத்தின் உளவியலையும், சமூக வளர்ச்சித் திட்டங்களையும் வகுப்பதில் இந்த அனுபவங்களே பக்க பலமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

தனது பதவியை விட்டு விட்டு 2007 இல் இந்தியா திரும்புகிறார். அப்போது இந்திய நாட்டில் இருக்கும் ஊழல் கரை படிந்த கட்சிகளை ஒழித்து, வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுக்கிறார். அதற்காக, அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸின் உதவியை நாடினார்.

இந்தியாவின் சமூகப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தன்னிடம் திட்டம் இருப்பதாக கூறி ஒரு செயல் திட்ட (Blue print) வடிவத்தை ராகுல் காந்தியிடம் காட்டுகிறார். ஆனால் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் ஒரு Multi  speciality மருத்துவமனை அமைக்கும் திட்டம் குறித்து விவாதித்தோடு நிறுத்திக் கொண்டார் என்பது தான் பிரசாந்த் கிஷோர் வரலாற்றில் உச்சப் பட்ச சோகமாக மாறி இருக்கும்.

அதோடு நிறுத்தாமல், மன்மோகன் சிங்குக்கு இந்தியாவின் சுகாதாரத்துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகச் சுட்டிக் காட்டி, இந்திய முன்னேற்றத்திற்கான திட்டங்கள் இருப்பதாகக் கூறி கடிதம் எழுதுகிறார். இந்த முயற்சியும் கடும் தோல்வியைத் தழுவியது. இந்தியாவின் ஊழல் கரை படிந்த அரசியல் நிலைமையை மாற்றி மக்களுக்கான நலத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டிய பிரசாந்த் கிஷோர் அரசியல் பாதையை தேர்ந்தெடுக்காமல் சாணாக்கிய (அரசியல் வியூகம் வகுக்கும்) பாதையை தேர்ந்தெடுத்தது நமது துருதிஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

அன்றைக்கு குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். வளர்ச்சித் திட்டப் பணிகளை குறித்த தனது விளக்கங்களை தெரிவிக்க ஆர்வத்தோடு இருப்பதாகவும் அதில் குறிப்பிடுகிறார். சட்ட மன்றத் தேர்தல் நேரம் என்பதால் இதைக் கூர்ந்து கவனித்த நரேந்திர மோடி அவரை சந்திப்பதற்கு தயாராகிறார். பிரசாந்த் கிஷோர் என்ற சாணாக்கியன் உருவாக்கப் படுகிறார்.

உண்மையில், பிரசாந்த் கிஷோரின் செயல் திட்டம் சுகாதார சீர்க்கேட்டினைச் சரிசெய்வது தான். சமூக முன்னேற்றம், வளர்ச்சி பாதை நோக்கி சிந்தித்த ஒருவரை கட்சியின் விளம்பர டிசைனராக மாற்றி மக்களுக்கான நலத் திட்டங்களில் இருந்து வெகுத் தொலைவிற்கு அவரை விலக்கியது அந்த முதல் சந்திப்புத்தான். அல்லது உண்மையில் இப்படியான ஒரு வளர்ச்சித் திட்டங்கள் நல்ல நோக்கத்தோடு தான் உருவாக்கப் பட்டதா? ஏனெனில் கிஷோரின் செயல் இப்போது சந்தேகத்தை வரவழைக்கிறது. ஒரு தேர்ந்த அரசியல் விற்பன்னராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் மக்களுக்கான நலத் திட்டங்களை உண்மையிலேயே உருவாக்கி இருப்பாரா??? உண்மை நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் 3 ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டு இருக்கிறார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியை வளர்ச்சி நாயகனாக மாற்றிக் காட்டுகிறார் பிரசாந்த் கிஷோர். அன்றைக்கு குஜராத்தின் வெற்றி, பிரசாந்த் கிஷோரையும் வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. பிரசாந்த் கிஷோர் கட்சிகளுக்கு மார்க்கெட்டிங்க் செய்து கொடுப்பதற்கு 2013 இல் CAG என்ற நிறுவனத்தைக் தொடங்குகிறார். 2014 இல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் படுகிறது.

பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி நிறுத்தப் படுகிறார். குஜராத்தை தவிர்த்த மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. பலம் வாய்ந்த கட்சியாக இல்லை. மோடியின் முகம் இந்தியா முழுவதும் தெரியாது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். இங்கு தான் நமது சாணாக்கியன் மிகவும் அற்புதமாக வேலை பார்த்து இருக்கிறார்.

குஜராத்தின் வளர்ச்சித் திட்டங்களை நாடு முழுவதிலும் ஏற்படுத்திக் காட்டுவது பா.ஜ.க. வின் செயல் திட்டமாக அறிவிக்கப் படுகிறது. வளர்ச்சி நாயகன் மோடி என இந்தியா முழுவதற்கும் கொண்டு செல்லப் படுகிறது. மோடியின் கடந்த காலம் குறித்து ஊரறிய பேசப்படுகிறது. டீக்கடையில் வேலை பார்த்த ஒருவர் இந்தியாவின் பிரதமராக முடியுமா? என்று இந்திய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பா.ஜ.க. விற்கு சாதகமாக மாற்றி காட்டுகிறார் பிரசாந்த் கிஷோர். மோடிக்கு நேர்காணலில் எப்படி நடந்து கொள்வது என்பது முதற்கொண்டு சொல்லிக் கொடுக்கப் படுகிறது. ஒரு இடத்தில் பேசிய காணொளி நாடு முழுவதற்கும் கொண்டு செல்லப் படுகிறது. RSS, சிவசேனாவை விரும்பாத இளைஞர் பட்டாளங்களை கவருவதற்கான அனைத்து உக்திகளும் வகுக்கப் படுகின்றன.

2014 பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை வெற்றிப் பெறுகிறது. இந்தியாவின் அரசியல் வரலாற்றையை மாற்றிக் காட்டிய 2014 தேர்தல் வரலாற்றில் முக்கியப் புள்ளியாக மாறுகிறார் பிரசாந்த் கிஷோர். மோடி அரசு பதவி ஏற்றவுடன் CAG நிறுவனத்தை அரசின் நிறுவனமாக அறிவிக்குமாறு கோரிக்கை வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, கிஷோருக்கு அதிக இடம் கொடுப்பதாக கட்சிக்குள் சலசலப்பு வருகிறது.

தனது CAG பற்றி பா.ஜ.க. கண்டு கொள்ளாததால் தனது நட்பை காங்கிரஸ் கட்சியுடன் வளர்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார் பிரசாந்த் கிஷோர். CAG ஐ கலைத்துவிட்டு I – PAC என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். இந்நிறுவனத்திற்கு எந்த அரசியல் கொள்கைகளும் கிடையாது என்பதும் முக்கியமான விஷயம். அரசியல் தலைவர்கள் எல்லாரும் இவர்களது வாடிக்கையாளர்கள். தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான டிசைன்களையும் காணொளிகளையும் தேர்தல் யுக்திகளையும் வகுத்துக் கொடுப்பது மட்டுமே இவர்களது வேலை.

பீகார் - 2014  நவம்பரில் நிதிஷ் குமார் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறுகிறார். வெற்றிக் களிப்பில் திளைத்த நிதிஷ் குமார் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பையும் இவருக்கு வழங்குகிறார் என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். இவர் வகுத்துக் கொடுத்த அரசியல் வியூகம் அக்கட்சியில் இருந்த பிளவினையும் தாண்டி வெற்றியைத் தேடித் தந்தது. பா.ஜ.க. முக்கிய எதிர்க் கட்சியாக செயல்பட்டும் இந்த வெற்றி நிதிஷ் குமாருக்கே வாய்த்தது. அரசியல் கொள்கைகளை வகுக்கும் இடத்தில் ஒரு போதும் இருக்க முடியாது என ஏங்கிய பிரசாந்த் கிஷோர் அக்கட்சியில் தன்னை முழுமையாகவும் இணைத்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

பஞ்சாப் வெற்றி

2017 இல் பஞ்சாப் இல் காங்கிரஸ் வெற்றி. நவ்ஜோத் சிங் தலைமையில் கடுமையான போட்டி நிலவிய சூழலில் காங்கிரஸ் வேட்பாளர் அமரிந்தர் சிங்கை வெற்றி பெற செய்தார் பிரசாந்த் கிஷோர். இதற்காக சமூக ஊடகங்கள் பெரிய அளவிற்கு பயன்படுத்தப் பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது. தன்னுடைய ஜோசியக்காரர் என்றே பிரசாந்த் கிஷோரை அறிவிக்கும் அளவிற்கு பஞ்சாப்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பிரசாந்த் கிஷோர் விளங்கினார். இதில் இருந்து காங்கிரஸ்க்கும் பிரசாந்த் கிஷோருக்கும் நெருக்கமான நட்புறவு இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.

மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி

ஐக்கிய ஜனதாதள கட்சியில் பொறுப்பு வகிக்கும் பிரசாந்த் கிஷோர் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கைகோர்த்து இருப்பது அம்மாநிலத்தில் கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. வணிக நோக்குடன் பணியாற்றும் ஐபேக் நிறுவனம் மம்தா பானர்ஜியின் அடையாத்தை (Image) உயர்த்திக் காட்டும் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வுக்கு எதிராக காளி, ரவீந்திர நாத் தாகூரை போன்ற கருத்தியலை (Ideology) முன்னிலைப் படுத்துமாறு ஐபேக் நிறுவனம் அறிவுரை கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இந்து என்ற அடையாளத்துக்கு எதிராக இந்த ஏற்பாடு என்று தற்போது இத்தகைய முயற்சிகளை விமர்சித்து வருகின்றனர்.

டெல்லி ஆம் ஆத்மி

டெல்லி - சட்ட மன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கும் அரசியல் வியூங்களை வகுத்துக் கொடுத்தது பிரசாந்த் கிஷோர் தான். ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக அம்மாநிலத்தில் வெற்றி பெறுகிறது என்றாலும் பா.ஜ.க. வின் கடும் எதிர்ப்பினையும் மீறி இந்த வெற்றியை ருசித்து இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

ஐபேக் சறுக்கிய இடங்கள்

2017 இல் உத்திரபிரதேசத்தில் மிகப்பெரிய சறுக்கலைச் சந்தித்தது ஐபேக் நிறுவனம். பிரியங்கா காந்தியை காங்கிரஸின் தலைவராக அறிவிக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தி இருந்தார். மேலும், தேர்தல் வேலைகளுக்கு 14 அம்சங்கள் கொண்ட ஒரு செயல் திட்டத்தை வகுத்து இருந்தார். கடைசி நேரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்ததால் செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்த இயலாமல் போனது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்தது. இத்தோல்விக்கு கடைசி நேரத்தில் வைத்த கூட்டணியே காரணம் எனக் ஐபேக் நிறுவனம் கூறியது.

2019 இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த  சிவசேனா, பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் படியே அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. 124 இடங்களில் 115 இடங்களை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 54 இடங்களை மட்டுமே வென்றது. இதில் சிவசேனா மிகவும் கடுப்பானது என்பதும் குறிப்பிடத் தக்கது. முந்தைய சட்ட மன்றத் தேர்தலில் 63 இடங்களை பிடித்த சிவசேனா தற்போதைய மோசமான நிலைமைக்கு பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகங்களே காரணம் எனவும் குற்றம் சாட்டியது. அவருக்கு மாநில நிலவரம் புரியவில்லை. வெறுமனே தேர்தல் பணி ஆற்றியிருந்தால் கூட 90 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கலாம் எனக் கட்சியினர் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை அடுத்து சிவசேனா பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு தேசியவாத காங்கிரஸ் மற்றும் கங்கிரஸ் கூட்டணியுடன்  அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்து என்பதும் குறிப்பிடத் தக்கது.

மகாராஷ்டிராவில் ஐபேக் நிறுவனம் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச் சாட்டு இவரின் புகழை ஒரு சிறிதும் குறைத்துவிட வில்லை என்பதே முக்கியமானது.

தெலுங்கானா

தெலுங்கானாவில் ஜெகன் மோகன் ரெட்டி - தனது தந்தையின் இறப்புக்குப் பின்னர் எவ்வளவு முயன்றும் மக்கள் மத்தியில் பெரிய தலைவராக காட்டிக் கொள்ள முடியாத சூழல் நிலவியது. சொத்து குவிப்பு வழக்குகளும் அவரை நெருக்கின. இந்தச் சூழலில்தான் ஐபேக் நிறுவனத்துடன் கைக்கோர்த்தார் ஜெகன்மோகன். மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 161 வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தது நிஜமாகவே மேஜிக் என்றே சொல்லப் பட்டது. ஓய்எஸ்ஆர் காங்கிரஸை ஒரே அடியாக புகழின் உச்சிக்கு உயர்த்து காட்டிய அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடுவின் புகழைப் படுகுழிக்குள்  தள்ளவும் மறக்கவில்லை ஐபேக் நிறுவனம்.

பிரஜா சங்கல்ப பாத யாத்திரை – 15 மாதங்களில் 2 கோடி மக்களை நடந்து சென்று நேரில் சந்தித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. ராகவி ஜெகன், காவலி ஜெகன் என்று ஜெப மந்திரங்களை போல புகழ் மாலைகள் உருவாக்கப் பட்டன. மக்களுடன் நடந்த சந்திப்புகளை திரும்ப திரும்ப மக்களை பார்க்க வைக்கும் முயற்சியில் ஐபேக் நிறுவனம் ஈடுபட்டது. ஜெகன் வெற்றியும் தெலுங்கு தேசக் கட்சியின் தோல்வியும் பிரசாந்த் கிஷோரின் செயல் திட்டத்தினால் நடந்தது என்பதை  எந்த ஒரு அரசியல் விமர்சகரும் ஒப்புக் கொள்ள தயங்கவில்லை.

தமிழ்நாடு

2021 இல் தமிழக சட்ட மன்ற தேர்தல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே வியூகங்களை வகுத்து அந்தத் தேர்தல் களத்தில் பணியாற்றுவதே பிரசாந்த் கிஷோரின் பாணி. இப்படி இருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் பிரசாந்த் கிஷோரை சந்தித்து இருப்பது தான் படு சுவாரசியம்.

ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அவரது ஆலோசனையின் படிதான் செயல் பட்டு வருகிறது. மக்களுடன் நேரடியாக அணுகுதல், சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்குதல், ஊடகங்களில் தொடர்ந்து தலைகாட்டுதல், மாணவர்களை ஒருங்கிணைத்தல் போன்ற நடவடிக்கைகள் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் படியே நடந்ததாகச் சொல்லப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோருடன் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் 5% வாக்குகளைப் பெற்றிருந்தது. சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் ஐபேக் நிறுவனத்துடன் இணைவார் என்று கருத்துகள் வெளியாகி இருந்த நிலையில் கமல்ஹாசன் அந்தத் தொடர்பை துண்டித்துக் கொண்டிருக்கிறார்.

கல்ஹாசனின் விலகலுக்கு, பாஜக தமிழகத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பிரசாந்த் கிஷோரை சந்திக்க முயற்சிப்பதே காரணம் என்று சொல்லப் பட்டது. ஆனால் உறுதிப்படுத்தப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

திமுக தற்போது பிரசாந்த் கிஷோரை அணுகியிருப்பதால் தமிழ்நாட்டில் மிகுந்த எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. முன்னதாக அஇஅதிமுக நாடாளுமன்ற தேர்தலில் கடும் தோல்வியைச் சந்தித்த போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நமது ஐடிவிங்க் சரியாகச் செயல்படவில்லை என்று கருத்து கூறியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து தனது பிரச்சார முறையை மாற்றி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் இதற்கான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

தமிழகத்தில் வருகின்ற 2021 சட்ட மன்றத் தேர்தலை கையாளுவதற்கு திமுக தற்போது ஐபேக் நிறுவனத்தை நாடியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் திமுக 38 இடங்களை வென்றது. ஆனால் தமிழக இடைத்தேர்தலில் 22 இடங்களுக்கு 13 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. இந்நிலையில் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களிடம் திமுகவை யும் கொள்கைகளையும் எடுத்துச் செல்வதில் ஐபேக் நிறுவனத்துடன் சிறந்த இளைஞர்கள் இதில் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சியான அதிமுக இது குறித்து விமர்சனம் தெரிவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

திமுக தலைமையில் யாருக்கும் பேச்சாற்றல் இல்லையா? பேச்சாற்றல் மிக்க அண்ணா, கருணாநிதி போன்ற தலைமைகள் எல்லாம் இருந்த ஒரு கட்சி ஐபேக் நிறுவனத்தை நாடி இருப்பது நல்ல ஒரு அரசியல் தந்திரமா? என்ற விமர்சனத்தை அதிமுக இப்போதே தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

கட்சியின் ஒற்றை முகமாகத் தன்னை காட்டிக் கொள்ள முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாந்த் கிஷோரை சந்திக்க முயற்சி செய்து இருக்கிறார். அரசியல் நிலைப்பாட்டில் எந்த ஒரு உறுதியான முடிவினையும் எடுக்காத நடிகர் ரஜினிகாந்த்தும் பிரசாந்த் கிஷோரை சந்தித்து இருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்

அரசியல் களத்தில் மக்களின் நாடித் துடிப்பினைச் சரியாக கணிப்பதில் வல்லமை பெற்றவராக திகழ்ந்து வரும் இவர் தற்போது இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கிறார். ஒரு மாநிலத்தின் நடக்கும் உட்கட்சி பூசல் முதற்கொண்டு அனைத்து நிலைமைகளையும் கணிப்பதற்கு இவர் தொடர்ந்து வேலை செய்கிறார் என்பது முக்கியமானது. ஒரு மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தல் வருகிறது என்றால் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே தனது வேலையைத் தொடங்கி விடுகிறார். இதற்காக இவர் வாங்கும் குறைந்த பட்ச சம்பளம் ரூ. 150 கோடி என்பது தான் கவனிக்க வேண்டியது.

இந்தியாவில் முதன் முதலாக ராஜீவ் காந்தியே இப்படி அரசியல் வியூகங்களை வகுப்பவர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டார். துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் சோ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டது அனைவரும் அறிந்ததே. இதெல்லாம் ஆதாயங்கள் இல்லாமல் புரிந்துணர்வு அடிப்படையில் நடந்தது.

அதிகாரத்திற்கு வருபவர்களை மக்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மக்களின் மனதில் புகுந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்குமாறு செய்வது இந்திய அரசியல் நிலைமைக்கு சரியா? மக்களின் நலப் பணிகளுக்கு இது உதவுமா? தேர்தல் ஆதாயத்துக்காக கார்ப்பரேட் கம்பெனிகளை வளர்த்து விடுவது சரியா? அரசியல் தலையெழுத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தேர்ந்தெடுக்கிறது என்றால் இந்த அரசியல் அடுத்து என்னவாகும்? எல்லாமே தொடர்ந்து கேள்வி குறிதான். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment