EMI கடன் வசதியினால் ஏற்படும் பாதிப்புகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனிநபரிடம் கடன் வாங்கும்பொழுதோ அல்லது வங்கியில் கடன் வாங்கும் பொழுதோ அதன் வட்டி விகிதத்தை ஒரு முறைக்குப் பல முறை ஆலோசித்துச் செயல்படுகிறோம். மீட்டர் வட்டி என்றெல்லாம் பேச்சு வழக்கில் சொற்களும் அவ்வபோது பயன்படுத்தப்படுவது உண்டு. ஆனால் EMI செலுத்திப் பொருட்களை வாங்கும்போது அந்த கடனுக்கான வட்டியினைக் குறித்துப் பெரிதாகக் கவலை கொள்வதில்லை.
அனைத்துச் சேவைகளிலும் நன்மைகளும் தீமைகளும் இருக்கத்தான் செய்யும் என்றாலும் சாதாரண மனிதர்களிடம் இத்தகைய கடன் வசதிகள் நன்மைகளுடன் சில பாதிப்புகளையும் ஏற்படுத்துவதனை இன்றைக்குப் பெரிதாக எவரும் கண்டுகொள்வதில்லை. காரணம் வாங்குகின்ற சக்தியுடையவர்களாக EMI கடன் வசதி நம்மை மாற்றுகிறது என்ற மனமகிழ்ச்சியே இத்தகைய ஆலோசனைகளைத் தவிர்த்து விடுகின்றன.
தற்போதைய காலச் சூழலில் அத்யாவசியப் பொருட்கள் முதற்கொண்டு ஆடம்பரத் தேவைக்கான அனைத்துப் பொருட்களையும் EMI செலுத்தி வாங்குவருகிறோம். இதில் O சதவீத முன்தொகை கடன்களும் கிடைக்கின்ற நிலையில் சேமிப்புத் தொகை இல்லாமலே பல பொருட்களை வாங்கி குவிக்கும் வழக்கம் தற்போது பெருகிவருகிறது. நடுத்தர வர்க்கத்திடமும் இளைய தலைமுறையினரிடம் EMI செலுத்தும் வழக்கம் தற்போதைக்கு அதிகமாகிவருகிறது.
தேவையில்லாத பொருட்களை வாங்கி குவித்தல்
நடுத்தர வர்க்கங்கள் பெரும்பாலும் தங்களது அத்யாவசியத் தேவைகளுக்காகக் கடன் வாங்குவதைவிட ஆடம்பரங்களைப் பூர்த்தி செய்யும் விதமாகவே EMI கடன்கள் வாங்கப்படுகின்றன. தனது சக்திக்கு மீறி அனைத்து இயந்திரச் சாதனங்கள், கார், வீடு போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இத்தகைய கடன் வசதிகள் பெரும் உதவிப் புரிகின்றன. ஆனால் தான் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தவோ, EMI செலுத்தி வாங்கிய காருக்கு பெட்ரோல் போடவோ முடியாமல் பலர் திண்டாடி வருகின்ற நிலைமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. காரணம் கடன் கிடைக்கிறது என்ற நம்பிக்கையை EMI கடன் வசதி கொடுக்கிறபோது மிக எளிதாக அந்தக் கடனைப் பெற்றுவிட முடிகிறது. ஆனால் அதனைத் திருப்பிச் செலுத்த தன்னிடம் சக்தி இருக்கிறதா என்பதனைக் குறித்து ஆலோசனை செய்ய நடுத்தர வர்க்கம் தவறி விடுகிறது.
சக்திக்கு மீறி கடன் வாங்குதல்
மாதச் சம்பளம் நிரந்தரமாக வருகிற நிலையில் சொந்த வீட்டினை வாங்கி விட வேண்டும் என்று பலர் முடிவெடுக்கின்றனர். வாங்குகின்ற கடன்களுக்காக வாழ்நாளில் பெரும்பகுதி கடன் தொகையைச் செலத்திவிட்டு தனது வாழ்நாளில் குறைந்தபட்ச மகிழ்ச்சியைக்கூட அனுபவிக்க இயலாத நிலைமையே இன்றைக்கு பெருகிவருகிறது எனலாம். இதற்கு அடிப்படைக் காரணம் தனது சக்தியை மீறி தனது வாழ்வை மாற்றியமைக்க முற்படுவதே ஆகும்.
எப்பொழுதும் கடனாளி
இளைய தலைமுறையினர் செல்போன், கணினி போன்ற தேவைகளை EMI வசதி கொண்டு நிறைவேற்றிக்கொள்கின்றனர். ஆனால் உயர்ந்த விலையில் செல்போன்கள், அடிக்கடி செல்போன்களை மாற்றுவது போன்ற வாடிக்கைகள் இந்த EMI வசதியால் அதிகரித்துள்ளது. இந்த மாதிரியான நடவடிக்கைகள் இளைய தலைமுறையினரிடம் சேமிப்புத் தொகை இல்லாமல் எப்பொழுதும் கடனாளியாகவே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கிவிடுகிறது.
பொருட்களின் தரம்
EMI யில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் தரமுடையதாக இருக்கிறதா? அதன் விலை சரியாக இருக்கிறதா என்பதைக் குறித்தும் பெரும்பாலும் சிந்திக்க தவறிவிடுகிறோம். EMI வசதியில் பெரும்பாலான நிறுவனங்கள் பழைய பொருட்களையும் தரமற்ற பொருட்களையும் விற்கவும் முடியும் என்ற சந்தேகம் எழவே செய்கிறது. மேலும் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கவும் சில நிறுவனங்கள் முயலுவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.
சேமிப்பு பழக்கம் குறைதல்
இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் நடுத்தர வர்க்கமோ, பணக்கார வர்க்கமோ ஒரு பொருளை வாங்குவதற்காகத் திட்டமிட்டு பணத்தைச் சேமிப்பதில் ஈடுபட்டனர். அதற்காக சீட்டுப்போடுதல், வங்கியில் நிரந்தர வட்டித் தொகையினைச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றும்போது அவர்களின் பண இருப்பானது அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் ஒரு தேவைக்காகப் பணத்தினைச் சேமிக்கும்பொழுது அனாவசியமான செலவுகளைத் தவிர்த்து விடுவர். ஆனால் இன்றைய தலைமுறையினர் நீண்ட கால சேமிப்பினைக் குறித்து எப்பொழுதும் கவலை கொள்வதாகத் தெரிவதில்லை. மேலும் அன்றாட தேவைகளுக்காக வாங்கப்படும் ஆடம்பரப் பொருட்கள் ஒருபோதும் இளைய தலைமுறையினரை சேமிப்பில் ஈடுபட விடுவதில்லை.
EMI கடன் விகிதம்
கடன் தொகை, வட்டி விகிதம், அதனைத் திருப்பி செலுத்தும் காலம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையினைத்தான் EMI தொகையாக மாதம்தோறும் செலுத்தி வருகிறோம். நாம் வாங்குகின்ற கடன்தொகையுடன் சேர்த்து அந்தத் தொகைக்கான வட்டியும் குறைந்த பட்சம் 10 சதவீதமாக இருப்பதனைக் கடன் பெறும்போது நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.
உதாரணமாக நாம் ரூபாய் 10,00,000 ஐ 11 % வட்டி விகிதத்துடன் 15 வருடங்கள் செலுத்துகிறோம் என வைத்துக்கொள்வோம்.
10,00,000 வருட வட்டி விகிதம் - 11%. ஒரு மாதத்திற்குச் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் – 11/12% = 0.0091% எனும்போது மாத வட்டி -= 0.91667 %
கடன் காலம் 15 வருடம் எனில் 180 மாதங்கள்.
EMI = (10,00,000 X 0.0091667) x (1+0.0091667) ^ 180
(1+0.0091667) ^ 180- 1 )
= 9166.667 x 5.16829
-----------------------------
4.16823
= 47375.99
-------------
4.16823
ஒருமாதத்தில் செலுத்த வேண்டிய EMI = 11,365.97
இவ்வாறு 180 மாதங்களும் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்துகிறோம். சேட்டுக் கடைகளில் செலுத்தப்படும் வட்டியைக் குறித்து கிண்டல் செய்யப்படுவதைப் பல திரைப்படங்களில் பார்க்க முடியும். அந்த வட்டித் தொகையைவிட EMI கடன் வசதியால் வாங்குகின்ற பொருட்களின் வட்டி விகிதம் அதிகம் என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நிரந்தர வட்டி விகிதத்தில் EMI கடனைப் பெறும் போது இந்த வட்டி விகிதம் கடன் செலுத்தும் வரையில் மாறுவதில்லை. ஆனால் ப்ளோட்டிங் வட்டி விகிதம் எனில் சந்தை நிலவரங்களுக்கேற்ப வட்டி விதம் மாறிக்கொண்டே போகும் நிலைமையும் ஏற்படும். பெரும்பாலும் எதிர்காலத்தில் வட்டிவிகிதம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் நிரந்தர EMI வட்டி விகிதத்தினைத் தேர்வு செய்வதே நல்லது.
EMI கடன் வசதியைத் தவிர்க்க முடியாத நிலையில் பயன்படுத்துவதனை தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால் EMI ஒரு போதும், கடனாளியாகத் தொடர்ந்து இருப்பதற்கு ஆளாக்கி விடாமல் பார்த்துக்கொள்வதே நலம் பயக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments