பாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்!!!
- IndiaGlitz, [Thursday,December 03 2020]
புரெவி புயல் வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் தற்போது மையம் கொண்டிருக்கிறது. கடந்த 29 ஆம் தேதி தெற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும் அடுத்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியபடியே நேற்று இரவு இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையைக் கடந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டிருக்கிறது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து புரெவி புயல் பாம்பன்-குமரி பகுதிக்கு இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப் படுகிறது.
புயலின் தாக்கத்தால் பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் தென் மாவட்டங்கள் முழுவதும் தற்போது கனமழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கனமழையின் பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசு தென் மாவட்டங்களில் 209 நிவாரண மையங்களை அமைத்து உள்ளதகாவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தமிழகத்தில் 14 தேசிய மீட்புக்குழுக்கள் புயலின் பாதிப்புகளை சமாளிக்க குவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.