சட்டமன்றத்தில் முதல்வர் காட்டிய பின்லேடன் படம் எங்கு எடுக்கப்பட்டது? திடுக்கிடும் தகவல்
- IndiaGlitz, [Wednesday,February 01 2017]
சென்னை மெரீனாவில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே வன்முறை வெடித்ததாகவும் அரசு தரப்பிலும் காவல்துறையினர் தரப்பிலும் கூறப்பட்டது. இதற்கு ஆதாரமாக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் மெரீனா போராட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பின்லேடன் புகைப்படத்துடன் ஒரு வாலிபர் இருக்கும் புகைப்படத்தை சட்டமன்றத்தில் காண்பித்தார்.
இந்நிலையில் இந்த புகைப்படம் மெரீனா போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும் அதற்கு முன்னர் அதாவது கடந்த டிசம்பர் மாதம் முஸ்லீம் அமைப்பு ஒன்று நடத்திய முற்றுகை போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.
இதற்கு ஆதாரமாக இருசக்கர வாகனத்தில் பின்லேடனுடன் சென்ற அந்த வாலிபரே ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஜனவரி 23ஆம் தேதி தான் வேலை செய்யும் சிக்கன் கடையில் இருந்ததாகவும், அதற்கு ஆதாரமாக சிசிடிவி கேமிராவில் தான் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 5 மணி பணி செய்த வீடியோ உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில், தான் தன்னுடைய நண்பருடன் இணைந்து கலந்து கொண்டதாகவும் அப்போது தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பின்லேடன் படம் வைத்திருந்ததாகவும், அந்த படம் தான் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதாக தவறாக பரப்பப்படுவதாகவும் அவர் அந்த ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி தெரிவித்துள்ளார்.