நடிகை சாய் பல்லவி மீது எனக்கு கிரஷ்? மனம் திறந்த பாலிவுட் பிரபலம் பற்றிய சுவாரசிய தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,May 31 2023]

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நடிகை சாய்பல்லவி மீது தனக்கு கிரஷ் இருப்பதாக பாலிவுட் நடிகர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவருடைய செல்போன் எண் தன்னிடம் இருக்கிறது ஆனால் பேச பயமாக இருக்கிறது என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களிடையே படு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலின் நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. மிகச் சிறந்த நடனக்கலைஞரான இவர் மேக்கப் போடாமல் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை அந்தத் திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில் பிரேமம் வெளியாகி 8 வருடங்கள் ஆனப் பிறகும் அவருடைய மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே இன்றைக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய கதாநாயகியாக இருந்துவரும் அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் ‘எஸ்.கே.21’ திரைப்படத்தில் நடிகை சாய்பல்லவி இணைந்து நடித்துவருகிறார்.

இந்நிலையில் நேர்த்தியான நடனம் மற்றும் யதார்த்தமான நடிப்பு என்று ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையே தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நடிகை சாய் பல்லவி மீது தனக்கு கிரஷ் இருப்பதாக பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ‘பதாய் ஹோ‘, ‘கமாண்டே‘, ‘ப்ளர்‘, ‘ஷைத்தான்’ என்று பல திரைப்படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் இவர், தனது மனைவியை கடந்த 2020 இல் விவாகரத்து செய்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சாய் பல்லவி குறித்து பேசிய குல்ஷன் தேவய்யா, அவர் மீது நீண்ட நாட்களாகவே கிரஷ் இருக்கிறது. அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை… அவருடன் சேர்ந்து நடிக்கவும் விருப்பமாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகை சாய் பல்லவியின் செல்போன் எண் கூட என்னிடம் இருக்கிறது. ஆனால் பேசத்தான் பயமாக இருக்கிறது என்றும் பாலிவுட் நடிகர் குல்ஷன் பேசியிருப்பது ரசிகர்களிடையே படு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.