விஜய்யின் சகோதர சகோதரி செண்டிமெண்ட் படங்கள்

  • IndiaGlitz, [Thursday,June 22 2017]

விஜய்யின் சகோதர சகோதரி செண்டிமெண்ட் படங்கள்

இளையதளபதி விஜய் பேசும் வசனங்கள் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது 'அண்ணா' என்பது தான். திராவிட இயக்கத்தினர்களை அடுத்து 'அண்ணா' என்ற பெயரை அதிகம் உச்சரித்தவர் விஜய்யாகத்தான் இருக்கும். ஆனால் விஜய் கூறிய அண்ணா' என்பது அறிஞர் அண்ணாவை குறிப்பிடுவது இல்லை என்றும், சகோதர பாசத்துடன் அவர் கூறும் சொல் 'மாஸ்' வார்த்தை என்பதும் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் அறிந்ததே. விஜய் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் தனது சொந்த சகோதரரை போலவே நினைத்து வரும் நிலையில் அவர் நடித்துள்ள படங்களிலும் சகோதர பாசம் பொங்கி எழும் என்பதை சொல்ல வேண்டுமா? விஜய்யின் சகோதர பாசத்தை வெளிப்படுத்திய படங்களில் சிலவற்றை பார்ப்போம்

நேருக்கு நேர் - சகோதரர் ரகுவரன்:

தமிழ் சினிமாவின் திறமையான, இயல்பான நடிகர்களில் ஒருவரான மறைந்த நடிகர் ரகுவரனின் தம்பியாக இந்த படத்தில் விஜய் நடித்திருப்பார். ரகுவரனும் அவரது மனைவி சாந்திகிருஷ்ணாவும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் நிலையில் அவர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை அகற்றுவதிலும் தன்னை புரிந்து கொள்ளாமல் தன்மீது கோபப்படும் சூர்யாவுக்கும் தன்னை புரிய வைப்பதுமான கேரக்டரில் இந்த படத்தில் விஜய் நடித்திருப்பார். படம் முழுவதும் துறுதுறுவென இருக்கும் இந்த கேரக்டர் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.

தமிழன் - சகோதரி ரேவதி:

விஜய் நடித்த சகோதரி பாசத்தை வெளிப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. அக்கா ரேவதியை கொலை செய்த வில்லனுக்கு பாடம் புகட்டுவதுதான் இந்த படத்தின் கதை. ரேவதி மீதும் அவரது குழந்தை மீதும் விஜய் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்

பகவதி - தம்பி ஜெய்:

விஜய்யின் தம்பியாக நடிகர் ஜெய் அறிமுகமானது இந்த படத்தில் தான். தம்பியை கொலை செய்த வில்லனை பழிவாங்குவது, தம்பியின் காதலி வயிற்றில் வளரும் குழந்தையை காப்பாற்றுவதும் தான் இந்த படத்தின் கதை. விஜய் தன் தம்பி மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சியை பார்க்கும்போது இப்படி ஒரு அண்ணன் நமக்கு இருக்க மாட்டாரா? என அனைவரும் ஏங்கும் அளவுக்கு இருக்கும்

கில்லி - தங்கை பேபி ஜெனிபர்:

விஜய்யின் சுட்டித்தங்கையாக பேபி ஜெனிபர் 'புவனா' என்ற கேரக்டரில் நடித்திருப்பார். விஜய்யுடன் எப்போதும் செல்லச்சண்டை போடும் புவனா, ஒரு கட்டத்தில் விஜய்-த்ரிஷாவை காப்பாற்றவும் செய்வார். இந்த படத்தில் விஜய், ஜெனிபர் போடும் சின்ன சின்ன சண்டைகள் நம் எல்லோர் வீட்டிலும் நடந்திருக்கும் என்பதால் திரையில் பார்க்கும் ஒவ்வொருவரும் ரசித்து பார்க்கும் வகையில் இருந்தது.

திருப்பாச்சி - தங்கை மல்லிகா:

விஜய் நடித்த படங்களிலேயே அண்ணன் -தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் உள்ளது இந்த படத்தில்தான். சென்னை மாப்பிள்ளைக்கு தங்கையை கட்டிகொடுத்த விஜய், சென்னையில் உள்ள ரவுடிகளால் தங்கைக்கும் அவருடைய கணவருக்கும் ஆபத்து என்பதை அறிந்து சென்னையில் உள்ள மொத்த ரவுடிகளையும் வதம் செய்ய கிளம்பு ஆக்ரோஷமான அண்ணன் சிவகிரி கேரக்டரில் விஜய் தூள் கிளப்பியிருப்பார். இந்த படத்தின் வெற்றி தான் விஜய்யை முழு நேர ஆக்சன் ஹீரோவாக்கியது என்றும் கூறலாம்

சிவகாசி - தங்கை லக்ஷனா:

திருப்பாச்சி படத்தை அடுத்து மீண்டும் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த மீண்டும் ஒரு தங்கை செண்டிமெண்ட் படம் இது. சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறிய விஜய் மீண்டும் தனது சொந்த ஊர் திரும்பியபோது தனது மூத்த சகோதரனால் தங்கையும் அம்மாவும் துன்புறுத்தப்படுவதை அறிந்து அண்ணனுக்கு புத்திபுகட்டி தங்கையையும் தாயையும் காப்பாற்றும் முத்தப்பா கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். இந்த படமும் விஜய்க்கு இன்னொரு வெற்றி படமாக அமைந்தது.

வேலாயுதம் - தங்கை சரண்யாமோகன்:

மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படம் ஒரு ஆக்சன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு படம். தங்கை சரண்யாமோகனின் திருமணத்தன்று வெடிகுண்டு தாக்குதல் ஒன்றினால் தங்கையை பறிகொடுக்கும் விஜய், அதற்கு காரணமானவர்களை வேலாயுதம்' என்ற போர்வையில் பழிவாங்குவதுதான் கதை. இந்த படத்திலும் விஜய், சரண்யாமோகனின் அண்ணன் தங்கை காட்சிகள் ஜாலியாகவும், உருக வைக்கும் அளவிற்கும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி - தங்கை தீப்தி நம்பியார்:

இந்த படத்தில் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் குறைவு என்றாலும் படத்தின் திருப்புமுனை காட்சி ஒன்றில் விஜய்யின் தங்கை கேரக்டரை இயக்குனர் பயன்படுத்தியிருப்பார். விஜய் தனது தங்கை தீப்தி உயிரை பணயம் வைத்து தீவிரவாதிகளை வேட்டையாடும் காட்சியில் திரையில் மாஸ் ஆக இருக்கும்.