இந்த வெள்ளம் நமக்கு கற்று கொடுத்த பாடம் என்ன? இளையராஜா
- IndiaGlitz, [Wednesday,December 16 2015]
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜா, கலைப்புலி எஸ்.தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இளையராஜா, 'இந்த மேடையில் உதவி செய்யும் கரங்களும், உதவி பெறும் கரங்களும் சினிமா கரங்களாக இருக்கின்றது. நான் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் எனக்கே கொடுத்து கொண்ட மாதிரிதான் இருக்கின்றது.
நாம் செய்த குற்றத்திற்காக இறைவன் ஐம்பூதங்களில் ஒன்றான நீர் என்ற பூதத்தின் மூலமாக தண்டித்துள்ளார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வெள்ளம் வந்த ஒரு வாரத்தில் மக்களின் மனநிலை முற்றிலும் மாறியுள்ளது. நம் வீட்டிற்கு ஒருவர் சாப்பிட பிரெட் கொண்டு வந்தால், பக்கத்து வீட்டிலும் பசியாக இருக்கின்றார்கள். அவர்களுக்கும் பிரெட் கொடுங்கள் என்ற மனிதநேயத்தை இந்த வெள்ளம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.
கோடிக்கணக்கில் பணம் இருந்தும் ஒரு பிரெட் வாங்க வழியில்லாமல் இருந்தது இறைவனின் குற்றமல்ல. நாம் எல்லோரும் இணைந்து செய்த குற்றத்திற்கான தண்டனை. இந்த தண்டனையில் இருந்து நாம் மனம் திருந்தி பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற பாடத்தை கற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு இளையராஜா பேசியுள்ளார்.