பூவாடை காற்று பாடலின் தனித்துவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றிரவு ராஜா துணையுடன் வீடு திரும்புகையில், இந்த பாடல் என்னை பார்த்து சிரித்தது.
நீ எப்படின்னாலும் என்கிட்டே வந்து தான் ஆகணும் என்பதை போல ஒலித்தது. போதாததற்கு இங்கே வீடு செல்லும் வழியெங்கும், "கோ" பட போஸ்டர்களில் கார்த்திகாவின் கண்கள் என்னையே பார்க்கின்றன. நான் அழகா? எங்க அம்மாவா? ரெண்டுல ஒண்ணு இப்பவே சொல்லு! என்கின்றன... கரிய கண்கள், சற்றே ஏறு நெற்றி, நீண்ட புருவம், கூரான நாசி... கணக்கில் வராத புது நிறம் - எல்லாமே ராதா...!!
வழக்கமான மலையாளிகளின் தோற்றமின்றி, சற்றே சிங்கள சாயலில் சிறு வயது ராதா..80களின் இறுதியிலும் 90களின் துவக்கத்திலும் ஓங்கு தாங்காக நாயகர்களை உப்புமூட்டை சுமந்துவிடும் வகையிலான ராதா இல்லை... "தாங்குமோ என் தேகமே" என்று பூக்குவியலின் நடுவே பூவை விட மெலிதாய் படுத்திருக்கும் துவக்க 80களின் ராதா...
"டிக் டிக் டிக்" படத்தின் ’இது ஒரு நிலாக்காலம்’ பாடலில், மாதவி, ஸ்வப்னாவுடன் நீந்தும் ராதா... ’வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்’ என்று கமலுக்கு கட்டளை போட்டு அமர்ந்திருக்கும் "ஒரு கைதியின் டைரி" ராதா...!! இத்தனை நினைவுகளையும் இழுத்து விட்ட அந்த பாடல்... "கோபுரங்கள் சாய்வதில்லை" படத்தில் வரும் "பூவாடை காற்று... வந்து ஆடை தீண்டுமே..."
1982ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான "கோபுரங்கள் சாய்வதில்லை". நாயகன் மோகனின் ஏறுமுகத்தில் வெளியான படங்களில் ஒன்று. நாயகி சுஹாசினி, துணை நாயகி ராதா. தந்தையின் வற்புறுத்தலால் கிராமத்து பெண்ணை மணந்து, பணி நிமித்தம் தனியே பெங்களூர் செல்லும் மோகன், தனக்கு திருமணமானதை மறைத்து அலுவலகத்தோழி ராதாவை மணக்கிறார். அவர்களின் முதலிரவுப்பாடல் இது.
பாடலுக்காக ஜானகியுடன் இணைந்திருப்பவர் எஸ்.என். சுரேந்தர், எப்போதுமே எஸ்.பி.பியின் குரல்களில் ஜோடிப்பாடல்களை கேட்டு இந்த இணை சற்றே வித்யாசமாக ஒலிக்கும். இளையராஜாவின் தேர்வு என்னை ஆச்சர்யப்படுத்தும். சுரேந்தரை தேர்ந்தெடுக்க ராஜாவை எது தூண்டியிருக்கும்? ஆனாலும் மோகனுக்கு வசனங்களில் பின்னணிகுரல் கொடுக்கவே பிறந்தது போன்ற சுரேந்தரின் குரல் பாடலில் மோகனுக்கு சற்றே ஒத்துழைக்க மறுக்கும்.
ஒருமுறை சுரேந்தரின் நேர்காணலில் சொன்னவை. ராஜாவின் மெல்லிசைக்குழுவில் முதலில் பாடிக்கொண்டிருந்தவர் ஷோபா சந்திரசேகர். எங்கே ராஜாவின் கச்சேரி நடந்தாலும் அதில் ஜானகியின் பாடல்கள், ஷோபாவுக்கு. (எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில், இளம் வயது ஷோபா "காற்றில் எந்தன் கீதம்" பாடக்கேட்டிருக்கிறேன்). அக்காவுடன் துணைக்கு செல்கையில் ராஜாவின் அறிமுகம் சுரேந்தருக்கு. தொலைபேசி வசதிகளில்லாத அந்த நாளில், சுரேந்தரின் தெருவில் ஒருவருக்கு அழைத்து சுரேந்தரிடம் ராஜா பேசியிருக்கிறார். அப்படியான வாய்ப்புகள் இவை.
சுரேந்தர், தீபன் சக்கரவர்த்தி, சசிரேகா, கலைவாணன், உமா ரமணன், அருண்மொழி எல்லாம் ராஜாவின் செல்லங்கள்... அதிக வாய்ப்புகளை வர்த்தக ரீதியாக வழங்கியிருக்கா விட்டாலும், எப்போதும் தன வட்டத்தில் வைத்திருப்பார்.
இப்பாடலில் சுரேந்தரின் குரலை கொஞ்சம் கண்மூடி கேட்டிருந்தால், இன்றைய இளையதளபதி உங்கள் கண்முன் தோன்றுவார். அப்படியே அச்சு அசலாக விஜய்யின் குரல் போலவே ஒலிக்கும். ஒரு தாய் மாமனாக என்னை பூரிக்க வைக்கும் விஷயம் இது...!!
இனி பாடல்...
மழை ஓய்ந்த ஒரு இரவில், எங்கோ நடை சாத்தப்படும் கோவிலின் காண்டாமணி ஒலிக்கும் ஓசை... ராஜாவின் குரலில் துவங்கும் "ஊரெங்கும் மழையாச்சு..." பின் அதி அற்புத கிடார் துவக்கம்... (பேஸ் கிடார் உற்று கவனியுங்கள்) ஜானகி துவங்கும் "பூவாடைகாற்று..." ட்ரிபிள் தாளக்கட்டு, பல்லவி முடிவில் "ஈரவண்டுகள் தேன்குடிக்குமே" வுக்கு பிறகு முடிக்கும் ஹம்மிங், ராஜாவைத்தவிர யார் கோர்த்திருந்தாலும், இடைவெளியை நிரப்புவதாய் மட்டுமே இருந்திருக்கும்...!!!
பனிவிழும் மலர்வனத்தை போல, இப்பாடலும் முழுக்க கிடார் ராஜாங்கம். சரணம் துவக்கம் சுரேந்தர் குரலில்... இருவரிகளுக்கு பின் ஜானகி பாடுகையில், பின்னணியை கவனிக்கவும்... கீ போர்டு அல்லது கிடாரில் கொடுக்க வேண்டிய Chords வயலினில் கொடுக்கப்பட்டிருக்கும்...( ராஜா...ராஜா...!!).
பின்பு ஜானகியின் "பபப்பா..." இடையிசையில் நிதானமான குழல் இசை, பின்பு மிக நீண்ட கடினமான கிடார் கோர்வை. பின் இரண்டாம் சரணம்... ஜானகி குரலில் "காணாததன்றோ ஆண்வாசனை..."
இந்த வரிகளை மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறேன். இதை எப்படி சிந்தித்திருக்க முடியும்? இதை கேட்கும் போதெல்லாம் "வீடெல்லாம் காதலன் வாசனை வீசுதோ?" (மலரே மலரே உல்லாசம் - உன் கண்ணில் நீர் வழிந்தால்) ஞாபகம் வரும்.இரண்டாம் சரணத்திற்கு பிறகு சுரேந்தர் பூவாடைகாற்று பாடுகையில் பின்னணியில் ஜானகி சொல்லிக்கொண்டே வரும் "லலலலா" நான்கு முறையும் நான்கு விதமான லலலலா..வரிசையாய் நிறுத்தி வைத்த மெழுகுவர்த்திகளும், ராதா, மோகனை சுற்றி வரும் கேமராவும், ஜானகியின் உயிர் பறிக்கும் குரலும், ராஜாவின் இசையும் அனுபவித்தால் மட்டுமே விளங்கும்..!!
பூவாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே..
முந்தானை இங்கே குடையாக மாறுமே..
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே..
ஈரவண்டுகள் தேன் குடிக்குமே..
பாதை தடுமாறும், இது போதை மழையாகும்..
முந்தானை வாசம் ஏதோ சுகம்..
பாதை தடுமாறும், இது போதை மழையாகும்..
முந்தானை வாசம் ஏதோ சுகம்..
காணாத பூவின் ஜாதி..
நனைந்ததே தேகம் பாதி..
தள்ளாடும் காதல் ஜோதி..
என்ன சேதி..
இதுதானே மோகம்..
ஒரு பூவின் தாகம்..
குடையோடு நனையாதோ பூங்காவனம்..
ஏங்கும் இளமாலை.. விரல் தீண்டும் சுபவேளை..
காணாததன்றோ ஆண் வாசனை..
ஏங்கும் இளமாலை.. விரல் தீண்டும் சுபவேளை..
காணாததன்றோ ஆண் வாசனை..
அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு..
துள்ளுதே ரோஜாச்செண்டு சூடுகண்டு..
இருகண்ணின் ஓரம்.. நிறம் மாறும் நேரம்..
மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்..
பூவாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே..
முந்தானை இங்கே குடையாக மாறுமே..
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே..
ஈரவண்டுகள் தேன் குடிக்குமே..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments