காப்புரிமை பிரச்னையில் இளையராஜா: நீதிமன்ற உத்தரவின் முழுவிபரங்கள்
- IndiaGlitz, [Wednesday,June 05 2019]
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதி இன்றி பொது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆன்லைன் வானொலிகள் உள்பட அனைத்திலும் அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா கடந்த சில ஆண்டுகளாகவே தனது பாடல்களுக்கான காப்புரிமை பிரச்சனையில் தீவிரமாக இயங்கி வருகிறார். வெளிநாட்டு கலை நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தனது பாடல்களை பாடக்கூடாது என்று அவர் நோட்டீஸ் அனுப்பியதில் இருந்தே இந்த விவகாரம் பூதாகரமானது. பலர் இளையராஜாவை இதுகுறித்து கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் காப்புரிமை பிரச்சனையில் இளையராஜா தனது முடிவில் உறுதியாக இருந்தார். இப்போதைய இசையமைப்பாளர்கள் ஒரு படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகும்போதே காப்புரிமைக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். ஆனால் இளையராஜா காலத்தில் இதெல்லாம் கிடையாது. அதனால் அவருடைய புகழ்பெற்ற பாடல்களை அவருடைய அனுமதியின்றி பலரும் பயன்படுத்தி வருமானம் ஈட்டி வந்தனர்
இந்த் நிலையில் இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் தனது பாடல்கள் மூலம் ஒருசிலர் வருவாய் ஈட்டி வருவதாகவும், அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம் கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தன்னுடைய அனுமதி பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், தன்னுடைய அனுமதியின்றி மேற்கண்டவர்கள் தனது பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது இளையராஜா குறிப்பிட்டிருந்த நிறுவனங்கள் அவருடைய பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் பிறப்பித்த உத்தரவில், 'இளையராஜாவின் பாடல்களை அவருடைய அனுமதியின்றி அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்த நிரந்திர தடை விதிப்பதாகவும், அவரது பாடல்களை திரையரங்குகளை தவிர வேறு எங்கும் பயன்படுத்த கூடாது என்றும், குறிப்பாக ஆன்லைன் உள்ளிட்ட ரேடியோ நிறுவனங்கள், இசை போட்டிகள் ஆகியவற்றில் இளையராஜாவின் அனுமதி பெறாமல் அவரது பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இளையராஜாவின் பாடல்களுக்கு 10 ஆண்டிற்கான உரிமை பெற்றுள்ளதால் அவருடைய பாடல்களை பயன்படுத்த அனுமதி கேட்டு அகி இசை நிறுவனம் தொடர்ந்த வழக்கையும் நீதிபதி அனிதா சுமந்த் தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து இசைஞானியின் நீண்ட சட்டப்போராட்டம் ஒரு வழியாக அவருக்கு சாதகமாக முடிவுக்கு வந்துள்ளது.