கடைசி விவசாயி படக்குழு மீது இசைஞானி இளையராஜா திடீர் புகார்!

  • IndiaGlitz, [Thursday,December 02 2021]

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “கடைசி விவசாயி“. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் மீது இசைஞானி இளையராஜா இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

“காக்கா முட்டை“ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவர் இயக்குநர் மணிகண்டன். அதையடுத்து “கிருமி“, “குற்றமே தண்டனை“, “ஆண்டவர் கட்டளை“ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது விவசாயிகளின் வலியை உணர்த்துவிதமாக “கடைசி விவசாயி“ திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தை மணிகண்டனே தயாரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லாண்டி எனும் முதியவர் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இசைஞானி இசையமைத்து வந்தார். இந்நிலையில் படக்குழுவிற்கும் இசைஞானி தரப்புக்கும் இடையே நெருடல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பல நாட்களாக கிடப்பில் இருந்த இந்தப் படம் தற்போது சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த மாதம் நேரடியாக திரைக்கு வரவிருக்கிறது.

சமீபத்தில் “கடைசி விவசாயி“ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தன்னுடைய அனுமதியில்லாமல் படத்திற்கு வேறொரு இசையமைப்பாளரை நியமித்தது குறித்து இளையராஜா இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் “கடைசி விவசாயி“ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.