திருமணமான சில நிமிடங்களில் கடத்தப்பட்ட இளமதி காவல்நிலையத்தில் ஆஜர்
- IndiaGlitz, [Saturday,March 14 2020]
சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி என்ற இளம் பெண் திருமணமான சில நிமிடங்களில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இளமதி மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த தர்மாபுரி என்ற பகுதியை சேர்ந்த செல்வன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த இளமதி ஆகிய இருவரும் காதலித்தனர். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் போது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இளமதியின் பெற்றோர் வேறு ஜாதி பையனை தனது மகள் திருமணம் செய்ய விரும்புவதை ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் செல்வன் உடனடியாக திராவிடர் விடுதலைக் கழக உறுப்பினர்கள் உதவியுடன் இளமதியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணமான சில நிமிடங்களில் இளமதியை ஒரு கும்பலும் செல்வனை ஒரு கும்பலும் கடத்தியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்ததுடன் கடத்தப்பட்ட இருவரையும் உடனடியாக மீட்டு தரவேண்டும் என போலீசாரை வலியுறுத்தனர். இந்த பிரச்சனை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதும் தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளமதி மேட்டூர் அனைத்து காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் செல்வன் இருக்கும் இடம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.