'இது ஆண்மையில்லாத்தனம்': விஜய்சேதுபதி படக்குழுவை கடுமையாக விமர்சித்த இளையராஜா
- IndiaGlitz, [Monday,May 27 2019]
சொந்தமாக இசையமைக்க முடியாமல் என்னுடைய பாடல்களை பயன்படுத்தியது அவர்களுடைய ஆண்மையில்லாத்தனத்தை காண்பிப்பதாக இசைஞானி இளையராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் '96'. இந்த படத்தில் த்ரிஷா, பாடகி ஜானகியின் ரசிகையாகவும், அவருடைய பாடலை அவ்வப்போது பாடும் ஒரு கேரக்டரிலும் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் பாடகி ஜானகியை சந்திக்கும் ஒரு காட்சியும் இருந்தது. ஆனால் நீளம் காரணமாக இந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஆங்காங்கே தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியது தவறு என்று இளையராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 80களில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தின் பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எங்கு அவர்களால் முடியவில்லையோ, அந்த இடத்தில் புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால் அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தரமுடியாததுதான்.
எனது பாடலுக்கு இணையாக ஒரு பாடலை தர முடியாதது அவர்களுடைய பலவீனத்தைக் காண்பிக்கிறது. இது ஆண்மையில்லாத்தனமாகத்தானே உள்ளது. ஒரு கதையில் 1980-ல் உள்ள பாடல் என்றால் 80-களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலை சொந்தமாக இசையமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துவது ஆண்மையில்லாத்தனம்” என்று இளையராஜா கூறியுள்ளார்.