பிரபல பாடலாசிரியர் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் நேற்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரபல தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் காமகோடியான். இவர் எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, பரத்வாஜ், தேவா உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
76 வயதான காமகோடியான் நேற்றிரவு வயது மூப்பின் காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் காமகோடியான் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
கவிஞர் காமகோடியான் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு 'வரப்பிரசாதம்' திரைப்படத்தில் வேலை செய்யும்போதே, தயாரிப்பு மேலாளராக பணியாற்றியதின் மூலம் நன்றாகவே தெரியும். அப்பொழுதே தனக்கு தமிழ்ப் பாடல்களை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார்.
அவர் நம்முடைய எம்.எஸ்.வி அண்ணாவுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். மேடை கச்சேரிகளில் கவிஞர் காமகோடியான் எழுதிய ‘மனிதனாயிரு’ என்ற தனிப்பாடலை எம்.எஸ்.வி அண்ணா பாடியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. என்னுடைய இசையமைப்பிலும் பல பாடல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். அன்னார் மறைவு நம் தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கவிஞரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்" இவ்வாறு இசைஞானி இளையராஜா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments