ரஜினியின் 'கூலி' பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,May 01 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘கூலி’ படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா திடீரென நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது என்பதும் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருந்த இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த முன்னோட்ட வீடியோவில் தான் இசையமைத்த ’வா வா பக்கம் வா’ என்ற பாடலின் இசை இடம்பெற்றுள்ளதாகவும் அந்த இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்று ‘கூலி’ பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் ‘கூலி’ டீசரில் இருந்து அந்த இசையை நீக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இளையராஜா தனது நோட்டீஸில் சுட்டிக்காட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் ரஜினியின் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த நோட்டீசுக்கு சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து என்ன பதில் அளிக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.