இந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்: இளையராஜா வேண்டுகோள்
- IndiaGlitz, [Friday,September 08 2017]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் சமீபத்தில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியபோது தன்னுடைய பாடல்களை மேடையில் பாடினால் அதற்கு ராயல்டி தரவேண்டும் என்று எஸ்பிபிக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வரும் நவம்பர் 5ஆம் தேதி ஐதராபாத்தில் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். இதுகுறித்த புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர்கள் எஸ்பிபி மீதான காப்பிரைட் விவகாரம் குறித்த கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய இளையராஜா, ''நான் இந்த விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை. அதைப்பற்றி பேச ஆரம்பித்தால் அது வேறுவிதமாக திரும்பிவிடும். எனவே அதைப்பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன். இது முழுக்க முழுக்க எனக்கும் எனது நண்பருக்கும் இடையேயான விவகாரம். இதில் வேறு யாரும் தலையிட வேண்டாம்' என்று கூறினார்.
மேலும் காப்பிரைட் விவகாரத்தில் இளையராஜாவுக்கும் எஸ்பிபிக்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும், ஐதராபாத் இசை நிகழ்ச்சியில் எஸ்பிபி அவர்களும் கலந்து கொண்டு பாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.