உயர்ந்த சிந்தனை இருந்தால் தான் நல்ல படங்கள் வரும்: இளையராஜா

உயர்ந்த சிந்தனை இருந்தால் மட்டும்தான் இயக்குனர்களிடம் இருந்து நல்ல படங்கள் வரும் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

'சில்ட்ரன் ஆப் ஹெவன்' என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கான ’அக்காள் குருவி’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படம் குறித்து இசைஞானி இளையராஜா கூறியபோது, ‘உலகத் திரைப்படங்கள் பார்ப்பதில் எனக்கு மிகவும் ஆர்வம் என்றும் அந்த வகையில் ’சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ என்ற திரைப்படத்தை பார்த்த போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் என்றும் ஒரு ஜோடி செருப்பை வைத்துக் கொண்டு எவ்வளவு அழகாக திரைக்கதை அமைத்து ஒரு குடும்பத்தில் உள்ள பிரச்சனையை குழந்தைகள் எப்படி அணுகும் அதை அப்படியே ரியலாக எடுத்திருக்கிறார்கள் என்று கூறினார் .

இது போன்ற திரைப்படங்கள் ஏன் நம் இயக்குனர்களிடம் இருந்து வரவில்லை என்று நான் ஆதங்கப்பட்டேன் என்றும் உயர்வான சிந்தனை இருந்தால் மட்டுமே நல்ல படங்களை இயக்குனர்கள் கொடுக்க முடியும் என்றும் அந்த வகையில் இயக்குனர் சாமி இந்த படத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் ஒரிஜினல் கெடாமல் நம்மூருக்கு தகுந்தவாறு கதையை சற்று மாற்றி மிகவும் அருமையாக எடுத்திருப்பதாகவும் அவருக்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் அறிமுகமாகும் போது அவருக்கு நான் இசையமைத்ததற்கு காரணமே அவர் வித்தியாசமான படம் எடுத்ததால் தான் என்றும், இதுபோன்ற வித்தியாசமான படம் எடுக்கும் எந்த இயக்குனருக்கும் நான் ஆதரவாக இருப்பேன் என்றும் இளையராஜா கூறியுள்ளார்.