முதல்படமாக நினைத்து இசையமைத்து தருறேன்: 'தேசிய தலைவர்' படம் குறித்து இளையராஜா

  • IndiaGlitz, [Friday,October 16 2020]

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.

தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் இந்தப்படத்திற்காக 48 நாட்கள் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'கருப்பு நிலா' என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். மறைந்த பிரபல நடிகரும் பசும்பொன் தேவருடன் இணைந்து பயணித்தவருமான லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனின் மகன் SSR கண்ணன் இந்தப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணை வகித்துள்ளார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்,சௌத்ரி: “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு சமூகத்தின் தலைவர் அல்ல.. அவர் தேசிய தலைவர்.. இந்த படம் வெளியாகும்போது அதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். ஜெ.எம்’பஷீரை நான் சந்தித்த ஆரம்ப காலத்திலேயே அவரிடம் தேவரின் முகச்சாயல் தெரிவதை உணர்ந்திருக்கிறேன். இதுபற்றி இயக்குனர் அரவிந்தராஜிடம் பேசும்போது கூறியும் இருக்கிறேன். இதையடுத்து தான், தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீரை நடிக்க வைக்க முடிவு செய்தோம். ஆரம்பத்தில் அவர் தயங்கினாலும், பின்னர் தேசிய தலைவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது என்கிற மகிழ்ச்சியில் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்

மறைந்த லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனின் மகன் கண்ணன்: “பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறை படம் ஆக்குகிறோம் என்றும், அதில் நான்தான் தேவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ஜெ.எம்.பஷீர் சொன்னபோது எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவர் ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தபோது தேவரின் சாயலிலேயே அவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் தேவரின் வாழ்க்கை வரலாற்றில் அவர் நடிக்க முன்வந்ததை நான் பாராட்டுகிறேன். தேவர் வாழ்க்கை வரலாறு குறித்து எனது தந்தை கூறியுள்ள தகவல்களின் அடிப்படையிலும் மற்றும் தேவர் சமுதாயத்தை சேர்ந்த பலரிடமும் விசாரித்து, எந்த பிரச்சினையும் வராதபடி இந்த படத்த்தின் கதையை உருவாக்கியுள்ளோம் இந்தப்படத்தை அனுபவசாலியான ஒரு இயக்குனர் இயக்கும்போதுதான் அது ரசிகர்களிடம் முழுமையாக சென்றடையும் என்று நினைத்தபோது, இயக்குனர் அரவிந்தராஜ் தான் அதற்கு பொருத்தமானவர் என்பதில் சந்தேகமே இல்லை” என்று கூறினார்.

இயக்குனர் அரவிந்தராஜ்: “இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாகவே இருந்தேன். காரணம் ஏற்கனவே புகழ்பெற்ற, “போற்ற பாடடி பெண்ணே” பாடலை மிஞ்சும் விதமான ஒரு பாடலை தர, அவரால் மட்டும் தான் முடியும்.. இத்தனை வருடங்களில் அவருடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுதான். இந்த படத்தில் நீங்கள் இசையமைக்க ஒப்புக்கொண்டால் அதுவே எனக்கு 60 சதவீத வெற்றி என அவரிடம் கூறினேன். அவரும் புன்னகைத்தபடியே, “இனி வரும் நாட்களில் எங்கெங்கும் தேவர் பற்றிய புகழ் பாடப்படும் வேண்டும் என்றால் அது இந்த படத்தின் பாடல்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு சிறப்பாக பாடல்களை உருவாக்கி தருகிறேன்” என உறுதியளித்தார்..

இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்குவதற்காக தேவர் பற்றிய பல புத்தகங்களை தேடித்தேடி படித்தேன். அப்போதுதான் அவர் தேசியவாதி மட்டுமல்ல.. மிகப்பெரிய ஆன்மீகவாதி என்பதையும் தெரிந்து கொண்டேன். இன்னும் சொல்லப்போனால், அவரே எனக்குள் இறங்கி பல கருத்துகளை சொல்வது போல உணர்ந்தேன்.. சில நேரங்களில் மேற்கொண்டு கதையை நகர்த்துவதற்கு ஏதோ ஒரு தடங்கள் ஏற்படும்போதெல்லாம், யாரோ ஒருவர் மூலமாக தானாகவே அந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்தபோதெல்லாம், தேவரே நேரடியாக வந்து ஆலோசனைகள் சொன்னது போலவும் அவருடைய கதையை அவரே வடித்து எடுத்து இருக்கிறார் என்பது போலவும் தான் உணர்ந்தேன். தேவர் ஐயா சொல்லச்சொல்ல நான் இந்த கதையை எழுதி இருக்கிறேன் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

தேவர் ஐயாவின் உருவத்தில் ஜெ.எம்.பஷீர் கிடைத்து விட்டாலும், காந்திஜி, நேதாஜி, காமராஜர் போன்ற தலைவர்களின் சாயல்களிலும் உள்ள நடிகர்களை தேர்ந்தெடுப்பதற்காக கிட்டத்தட்ட 2,000 பேருக்கு நாங்கள் ஒப்பனை செய்து அதிலிருந்து மிகச்சரியான தோற்றம் கொண்ட நபர்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். படம் பார்க்கும் உங்கள் அனைவரையும் அவர்கள் ஒவ்வொருவரும் வியப்பில் ஆழ்த்துவார்கள்” என்று கூறினார்.

பசும்பொன் தேவராக மாறி இருக்கும் நாயகன் ஜெ.எம்.பஷீர் பேசும்போது, “இந்த படத்திற்காக எனக்கு பசும்பொன் தேவர் மேக்கப் போட்டபோது என்னாலேயே நம்ப முடியவில்லை.. அதன்பிறகுதான் தேவர் அய்யாவை பற்றிய புத்தகங்களை தேடித்தேடி படித்தேன் அதன்பிறகு தேவரின் பாதையை பின்பற்றவும் ஆரம்பித்தேன். இந்த படத்தில் நடிப்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தேன். இந்த படத்தில் என்னுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் அப்படியே பசும்பொன் தேவர் ஐயா போலவே இருக்கிறீர்கள் என பாராட்டினார்கள்.. இதுபோன்ற ஒரு வரலாற்று படத்தை எடுப்பதற்கு, ஊமை விழிகள், உழவன் மகன் போன்ற பிரம்மாண்டமான படங்களை கொடுத்த இயக்குனர் அரவிந்தராஜ் தான் பொருத்தமான நபர்.. அவர் இந்த படத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய வரம். என் வாழ்க்கையில் நான் இந்த ஒரு படத்தில் மட்டும் நடித்தால் மட்டும் போதும் என்கிற அளவுக்கு இதை மிகப்பெரிய படமாக உருவாக்குவோம்.

இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகியபோது,, என்னை பார்த்ததும் நீங்கள் தேவர் போலவே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.. தேவர் பற்றிய உண்மையான நிகழ்வுகளை படமாக்குவீர்களா என்று கேட்டார். அவரிடம் நாங்கள் உறுதி அளித்தோம். மேலும் தனது முதல் படமாக நினைத்து இதற்கு அற்புதமாக இசையமைத்து தருவதாகவும் இசைஞானி இளையராஜா வாக்களித்தார்” என்று பேசினார்.

இந்த படத்தின் தொழில்நுட்ப குழுவினர் விபரம்:

இயக்கம்: ஆர்.அரவிந்தராஜ்

இசை : இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவாளர்: அகிலன்

படத்தொகுப்பு : சரவணன்-சூரஜ் பிரகாஷ்

கலை இயக்குனர் : மணிமொழியன் ராமதுரை

ஒப்பனை: வீரா சேகர்

ஆடை வடிவமைப்பு: செல்வம்-வீரபாரதி

தயாரிப்பு நிர்வாகி :M.சேதுபாண்டியன்