என் வாழ்க்கை வரலாற்றை மூன்றே நாட்களில் படமாக்கலாம்: இளையராஜா
- IndiaGlitz, [Monday,March 25 2019]
இந்திய திரையுலகில் பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகியும், உருவாக்கப்பட்டும் வருகின்றன. தோனி, சச்சின், மேரிகோம், உள்பட பல வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வசூலிலும் சாதனை புரிந்துள்ளது. மோடி, ஜெயலலிதா போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களும் உருவாகி வரும் நிலையில் இசைத்துறையில் யாரும் செய்ய முடியாத சாதனை செய்து, கின்னஸ் சாதனை படைத்த இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறும் விரைவில் திரைப்படமாகவுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா கூறியபோது, 'என்னுடைய வாழ்க்கை வரலாறை சுயசரிதையாக எழுதி வருகிறேன். விரைவில் வெளியாகும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன். மூன்றே நாட்களில் படமாக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
மேலும் ‘நல்ல விஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது.இசை அமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியும், பாடல்கள் எழுதியும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளேன். மாணவர்களே கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள்' என்று மாணவர்களுக்கு இளையராஜா அறிவுரை கூறினார்.