தடை செய்யப்பட்ட ஆப்களை பயன்படுத்தினால் …. எச்சரிக்கை விடுக்கும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்!!!
- IndiaGlitz, [Wednesday,July 22 2020]
இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் ஊறுவிளைவிக்கும் விதமாக சீன செயலிகள் செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டி மத்திய அரசு கடந்த ஜுன் 29 ஆம் தேதி 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்தது. அதையடுத்து இச்செயலிகளை இந்திய பயனாளர்கள் பதிவிறக்கம் செய்ய முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் செல்போன்களில் இச்செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டாலும் இணையத்தின் வாயிலாக இச்செயலிகளை உபயோகிக்க முடியும் என்பதால் மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஒருவேளை செல்போன்களில் இச்செயலிகள் கிடைக்கப் பெற்று அதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினாலோ அல்லது மற்ற வழிமுறைகளில் இந்த ஆப்களை இயக்க முயற்சித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தண்டனை பிரிவு 69A வின் படி சீனாவின் டிக்டாக், யூசி பிராசசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. ஒருவேளை இந்தத் தடைச் சட்டத்தை மீறினால் அது இந்தியச் சட்டத்தை மீறும் குற்றத்திற்கு சமமானது என்ற எச்சரிக்கையையும் தற்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.