ஏற்கனவே கொரோனா தாக்கி இருந்தால் தடுப்பூசி போட வேண்டாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

இந்தியாவில் வரும் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்தில் இன்று முதல் ஒத்திகை செய்யப்படும் கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக ஏற்கனவே பதிவு செய்து இருக்கும் சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயப் பாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே கொரோனா பாதித்த நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டுமா என்ற கேள்விக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். அதில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தொற்றுநோய் நிபுணர் அமேஷ் அடல்ஜா, கொரோனா தாக்கி இருந்தாலும் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி குணம் அடைந்து இருந்தாலும் அவர்கள் மீண்டும் நோய் வாய்ப்படாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும். அதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என விளக்கம் அளித்து உள்ளார்.

அதேபோல ஜார்ஜ் மேசன் பல்கலைக் கழகத்தின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சஸ்கியா, ஒருவரது நோய் எதிர்ப்பு மண்டலமானது வைரஸை அடையாளம் காண வேண்டும். தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். அதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அளித்து உள்ள விளக்கத்தின்படி, கடந்த 3 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் மற்றவர்களுக்கு முதலில் கிடைப்பதற்காக வழிவிட்டு நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தாமதம் செய்யலாம். பாதுகாப்பு இல்லாதவர் முதலில் பாதுகாப்பு பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புவது இயல்பு என கூறியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் கூட அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு தாக்கும் குறைந்த நாட்களே இருக்கும் எனவும் நோயை அடையாளம் கண்டுகொள்ள கொரோனா தடுப்பூசி அவசியம் எனவும் நிபுணர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.