அதிகாரிகள் அத்துமீறினால் கடையடைப்பு நடக்கும்....! எச்சரிக்கை விடுக்கும் வணிகர் சங்கம்....!
- IndiaGlitz, [Tuesday,April 20 2021]
கொரோனாவை காரணமாக வைத்துக்கொண்டு, அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் அத்துமீறி நடந்துகொண்டால், தமிழக வணிக சங்க பேரமைப்பு சார்பாக தொடர் போராட்டம் நடக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், அதை தடுக்க எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இன்றுமுதல் கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு வர இருப்பதால், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை பின்பற்றப்படுகிறதா, என்பதை ஆய்வு செய்யவும் தனி அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, அவை பின்பற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் அதிகாரிகள் நடந்து கொள்வது கடுமையாகவும், சில சமயங்களில் அமைதியாகவும் இருக்கிறது. காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொள்வதாக வணிகர் சங்கத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன.
இந்நிலையில் வணிக சங்க தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள் கூறிய புகார்கள் குறித்து விவாதம் செய்யப்பட்டது.
கொரோனாவை காரணமாக வைத்துக்கொண்டு, ஆய்வு எனக்கூறி அதிகாரிகள் வணிக நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழைகின்றனர். சில அதிகாரிகள் அதிகமாக வசூல் செய்கிறார்கள், சிலர் அடாவடித்தனமாக சாவியை பிடுங்கி செல்கிறார்கள் என்று வியாபாரிகள் சார்பாக கூறப்பட்டது.
வணிகநிறுவனங்களில் கொரோனாவை காரணம் காட்டி அதிகாரிகள் அத்துமீறி நடந்துகொண்டால், வணிக சங்கம் சார்பாக தொடர் கடையடைப்பு நடத்தப்படும். சட்டத்திற்கு புறம்பான முறையில் அவர்கள் நடந்துகொண்டால், அடுத்தகட்ட நடவடிக்கை என்பது தீவிரமாக இருக்கும் என்றும் கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.