ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டால் நல்லதுதான்: கங்கை அமரன்
- IndiaGlitz, [Saturday,December 16 2017]
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றன. அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர் தினகரனும் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த முறை போலவே இந்த முறையும் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணமழையை அரசியல் கட்சிகள் பொழிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த முறை பாஜக வேட்பாளராக போட்டியிட்ட இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் ஆனார். இதனையடுத்து சற்றுமுன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் எதற்கும் பயந்து கொண்டு ஓடி ஒளியவில்லை. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே எனக்கு உடல் நிலை பாதிப்பு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மற்றபடி உடல் ஒத்துழைத்திருந்தால் நிச்சயம் போட்டியிட்டிருப்பேன்.
இனி பாஜகவில் தான் இருப்பேன். அதன் கொள்கைகளை நாட்டுக்கு எடுத்துரைப்பேன். காசு இருந்தால்தான் எம்எல்ஏ ஆகமுடியும் என்றால் தமிழகம் எங்கு செல்கிறது என்பதை யோசியுங்கள். தினகரன் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எல்லாரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். சம்பாதிக்க அரசியலுக்கு வராதவர்களுக்கு வாக்களியுங்கள். காசை வாங்கிக் கொண்டு மூன்று பேருக்கும் ஓட்டு போட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் தாமரைக்கு போடுங்கள்' என்று கூறினார்.
மேலும் ஆர்.கே.நகரில் அதிகளவு பணப்பட்டுவாடா நடப்பதால் இந்த முறையும் தேர்தல் நிறுத்தப்பட்டால் நல்லதுதான் என்றும் கங்கை அமரன் மேலும் கூறினார்.